பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு

பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு (International Civil Aviation Organization, ICAO, (பிரெஞ்சு: Organisation de l'aviation civile internationale, OACI), ஐக்கிய நாடுகள் அவையின் ஓர் தனி முகவாண்மை ஆகும். இந்த அமைப்பு பன்னாட்டு வான்வழி நடத்தல் நுட்பங்களையும் கொள்கைகளையும் ஆவணப்படுத்துவதுடன் பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்தின் திட்டமிடலையும் மேம்படுத்தலையும் வளர்க்கிறது. இதனால் சீரான வளர்ச்சியும் பாதுகாப்பான பயணமும் உறுதி செய்யப்படுகின்றன. கனடாவின் கியூபெக் மாநிலத்தில் மொண்ட்ரியாலில் உள்ள குவார்தியர் இன்டர்நேசனல் டெ மாண்ட்ரியாலில் (Quartier international de Montréal) இதன் தலைமையகம் அமைந்துள்ளது.


பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு
ஐசிஏஓ கொடி
வகைஐநா முகமை
சுருக்கப்பெயர்ஐசிஏஓ
ICAO
OACI
ИКАО
إيكاو
OPSI
தலைமைரேமாண்டு பெஞ்சமின்
நிலைசெயற்பாட்டில்
நிறுவப்பட்டதுஏப்ரல் 4, 1947[1]
தலைமையகம்மொண்ட்ரியால், கனடா
இணையதளம்www.icao.int

வான்வழிப் பயணம், அதற்கான கட்டமைப்பு, பறப்பு சோதனை, சட்டவிரோத குறுக்கீடுகளைத் தடுத்தல் மற்றும் பன்னாட்டு வான்பயணத்தில் எல்லைகளைக் கடக்கும் செய்முறைகளுக்கான வசதிகளை வழங்கல் போன்றவற்றிற்குத் தேவையான சீர்தரங்களையும் பரிந்துரைக்கப்படும் செயல்முறைகளையும் ஐசிஏஓ அவை கலந்தாய்ந்து முடிவெடுக்கிறது. மேலும், விமான விபத்துக்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளையும் ஐசிஏஓ வரையறுக்கிறது. இந்த நெறிமுறைகளை ஒவ்வொரு நாட்டின் வானூர்தி நிகழ்வுகளை விசாரிக்க அமைக்கப்படும் புலனாய்வு அமைப்புக்கள் சிகாகோ மரபொழுங்கு எனப்படும் பன்னாட்டு குடிசார் வான்பறப்பு மரபொழுங்கின்படி பின்பற்ற வேண்டும்.

ஐசிஏஓவிற்குள்ளேயே வான் வழிநடத்தல் குழு (ANC) என்ற தொழினுட்பக் குழு அமைந்துள்ளது. இந்தக் குழுவிற்கு ஐசிஏஓ அவை 19 ஆணையர்களை நியமிக்கிறது. இந்தக் குழுவின் இயக்குமையிலேயே வான்பறப்பு சீர்தரங்களும் பரிந்துரைக்கபட்ட செய்முறைகளும் மேம்படுத்தப்படுகின்றன. இந்தக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீர்தரங்கள் அவைக்கு அனுப்பப்படுகின்றன. அரசியல் சார்ந்த இந்த அவை, உறுப்பினர் நாடுகளுடன் கலந்தாய்ந்து இறுதியில் சீர்தரமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

மேற் சான்றுகள்

  1. icao.int International Civil Aviation Organisation History

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.