ரீயூனியன்

இரீயுனியன் அல்லது இரேயூனியன் (Réunion , French: La Réunion) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு. இது மடகாசுகருக்குக் கிழக்கே, மொரிசியசிலிருந்து 200கிமீ (120 மைல்) தென்மேற்காக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சென்-தெனி. இங்குள்ள மக்கள்தொகை 837,868 (2012 சனவரியின் படி) ஆகும்.[1] இங்கு குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள்.

இரீயூனியன்
Région Réunion
கொடி சின்னம்
Location of இரீயூனியனின்
தலைநகரம்செயிண்ட் டெனிஸ்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
பரப்பு
   மொத்தம் 2,512 கிமீ2
970 சதுர மைல்
மக்கள் தொகை
   சனவரி 2012[1] கணக்கெடுப்பு 837868
இணையக் குறி .re

ரீயூனியன் பிரான்சின் வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படுகிறது. இது பிரான்சின் 27 பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவாரிப் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது யூரோ வலயத்திலும் உறுப்புரிமை வகிக்கிறது.[2]

வரலாறு

10 சத நாணயம். 1816

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னரான ரீயூனியனின் வரலாறு அதிகம் பதியப்படவில்லை.[3] அரபு வணிகர்கள் இத்தீவை "டீனா மொர்காபின்" (Dina Morgabin') என அழைத்தனர்.[4] கிபி 1153 இல் அல்-சரீபு எல்-திரிசி என்பவர் வரைந்த உலக வரைப்படத்தில் இத்தீவும் இருந்திருக்கலாம்.[5] சுவாகிலி அல்லது மலாய் மாலுமிகளும் இங்கு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[3]

1507 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச நாடுகாண் பயணிகளின் வரவே இத்தீவை ஐரோப்பியர்களுக்குக் காட்டிக் கொடுத்தது. ஆனாலும் குறிப்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. குடிமக்களற்ற இத்தீவை முதன் முதலில் பெதுரோ மஸ்கரானசு என்பவர் இதனை முதன் முதலில் கண்டார். இரீயூனியன் அடங்கலாக உள்ள தீவுக் கூட்டத்திற்கு மஸ்கரானே தீவுகள் எனப் பெயரிட்டார்.[6] அப்பொலோனியா என்ற புனிதர் பெப்ரவரி 7 இல் (அவரது திருவிழா நாள்) போர்த்துக்கீசர் இத்தீவைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.[4] 1509 இல் டியோகோ லோப்பசு டி சிக்குவேரா என்பவர் இரீயூனியன், ரொட்டிகசு தீவுகளில் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது.[5]

ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் போர்த்துக்கீசர் சான்டா அப்பலோனியா தீவுகளை விட்டுச் சென்றதை அடுத்து[6] இத்தீவை பிரான்சியர் கைப்பற்றி மொரிசியசுத் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் இருந்து நிருவகித்து வந்தனர். 1638 யூன் மாதத்தில் பிரான்சுவா கோசி, சலமொன் கோபர்ட் ஆகிய பிரான்சியர் இத்தீவிற்கு முதன் முதலில் சென்றிருந்தாலும்,[7] 1642 ஆம் ஆண்டில் ஜாக் புரீனிசு என்பவர் இத்தீவை பிரான்சுக்காகக் கோரி, மடகாசுகரில் இருந்து சில பிரெஞ்சுக் கிளர்ச்சியாளர்களை அங்கு கொண்டு சென்றார். இக்குற்றவாளிகள் பல ஆண்டுகளின் பின்னர் பிரான்சு திரும்பினர். 1649 ஆம் ஆண்டில் இத்தீவு "இலே போர்போன்" (Île Bourbon) என அழைக்கப்பட்டது. 1665 இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 20 பேரை அங்கு கொனண்டு சென்று குடியேற்றியதில் இருந்து அங்கு குடியேற்றம் ஆரம்பமானது.

இந்துப் பண்டிகை, 19ம் நூற்றாண்டு

பிரான்சில் போர்போன் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, 1792 ஆகத்து 10 இல் மர்சேய் நகர புரட்சியாளர்களும் பிரெஞ்சுத் தேசியப் படையினரும் இணைந்ததைக் குறிக்க, 1793 ஆம் ஆண்டில் இத்தீவிற்கு "இரீயூனியன்" (Réunion) எனப் பெயரிடப்பட்டது. 1801 இல் இத்தீவிற்கு பிரான்சின் முதலாம் நெப்போலியன் நினைவாக "இலே பொனபார்ட்டே" (Île Bonaparte) எனப் பெயரிடப்பட்டது. 1810 இல் கொமடோர் யோசை ரவுலி என்பவர் தலைமையில் அரச கடற்படை இத்தீவைத் தாக்கி கைப்பற்றி, இதன் பெயரை மீண்டும் போர்போன் என மாற்றியது. 1815 ஆம் ஆண்டில் வியன்னா மாநாட்டை அடுத்து இது மீண்டும் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது. 1848 பிரெஞ்சுப் புரட்சியில் போர்போன்களின் ஆட்சி மீண்டும் முடிவுக்கு வந்ததை அடுத்து இத்தீவு மீண்டும் இரீயூனியன் எனப் பெயரிடப்பட்டது.

17 முதல் 19ம் நூற்றாண்டுகள் வரை, பிரெஞ்சு மக்களுடன், இத்தீவுக்கு ஆப்பிரிக்கர், சீனர், மலாய், மற்றும் இந்தியர்களும் குடியேறினர். 1690 முதல், ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து குடியேறியவர்கள் பெரும்பாலானோர் அடிமைகளே. 1848 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இல் அடிமைத்தொழில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஒப்பந்தக் கூலிகள் அழைத்து வரப்பட்டனர். 1869 இல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதை அடுத்து, ரீயூனியன் கிழக்கிந்திய வணிக வழிக்கான இத்தீவின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

ரீயூனியன் 1946 மார்ச் 19 இல் பிரான்சின் கடல் கடந்த மண்டலமாக ஆக்கப்பட்டது.

ரீயூனியனின் வரைபடம்

அரசியல்

ரீயூனியன் தீவு பிரெஞ்சு சட்டப்படி நிருவகிக்கப்படுகிறது. இதன் அரசியலமைப்பு 1958 செப்டம்பர் 28 ஆம் நாளைய பிரெஞ்சு அரசியலமைப்பு ஆகும். 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு வாக்குரிமை உண்டு. பிரான்சின் தேசியப் பேரவைக்கு இங்கிருந்து ஏழு உறுப்பினர்களும், மேலவைக்கு மூன்று உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

புவியியல்

ரீயூனியன் தீவு 63 கிமீ (39 மைல்) நீளமும், 45 கிமீ (28 மைல்) அகலமும் கொண்டது. 2,512 சதுர கிமீ (970 சதுரமைல்) பரப்பளவுடையது.

2005 இல் பைத்தான் டி லா போர்னைசி எரிமலை வெடிப்பு.

இத்தீவின் கிழக்கு எல்லையில் உள்ள ஒரு கேடய எரிமலை (பைத்தன் டி லா போர்னைசி) கடல் மட்டத்தில் இருந்து 2,631 மீட்டர் வரை வெடிக்கக்கூடியது, இது அவாய் தீவுகளின் எரிமலைகளின் இயல்புகளை ஒத்தது. 1640 ஆம் ஆண்டு முதல் இவ்வெரிமலை நூற்றுக்கும் அதிகமான தடவைகள் சீற்றம் அடைந்திருக்கின்றது. கடைசியாக 2010 சனவரி 2 இல் சீற்றம் அடைந்தது.[8] பைத்தன் டெஸ் நெய்ஜெசு என்ற எரிமலை என்பதே இத்தீவின் மிக உயரமான புள்ளி ஆகும். இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 3,070 மீ ஆகும். இந்த இரண்டு எரிமலைகளினது சாய்வான நிலப்பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும். தலைநகர் சென்-டெனிசு போன்ற பயிரிடும் நிலங்களைக் கொண்ட பிரதேசம் தீவின் கரையோரத் தாழ்நிலங்களில் அமைந்துள்ளன. மேற்குக்கரை கடற்பகுதியில் பவளப் பாறைகள் காணப்படுகின்றன.

தட்பவெப்பநிலை

ரீயூனியனின் தட்பவெப்பநிலை வெப்ப மண்டலக் காலநிலையை ஒத்தது. ஆனாலும், வெப்பநிலை மாற்றமடையக்கூடியது. ஆண்டின் மே மாதம் முதல் நவம்பர் வரை குளிராகவும், உலர் நிலையிலும் காணப்படும். நவம்பர் முதல் ஏப்ரல் வரி சூடானதாகவும், மழைக்காலமாகவும் இருக்கும். கிழக்குப் பகுதியில் மேற்கை விட மழைவீழ்ச்சி அதிகமாக இருக்கும். கிழக்கின் சில பகுதிகளில் சராசரியாக ஆண்டுக்கு 6 மீட்டர் வரையும், மேற்குக் கரையில் ஒரு மீட்டருக்கும் குறைவானதாகவும் மழைவீழ்ச்சி காணப்படும்.[9] 1966 சனவரி 7 முதல் 8 வரை தீவின் மத்திய பகுதியில் சிலாவோசு என்ற இடத்தில் 1,869.9 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இதுவே புவியில் 24 மணி நேரத்தில் பதியப்பட்ட ஆகக்கூடிய மழைவீச்சியாகும்.[10]

பொருளாதாரம்

ரீயூனியன் தீவின் முக்கிய உற்பத்தி, மற்றும் ஏற்றுமதிப் பொருள் சீனி ஆகும். தற்போது சுற்றுலா மூலம் பெருமளவு வருவாய் பெறப்படுகிறது.[11] 2007 இல், ரீயூனியனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18.7 பில்லியன்அமெரிக்க டாலர்கள் ஆகும்.[12] 2007 இல் நபர் ஒருவருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 23,501 அமெ. டாலர்கள் (இது சந்தை நாணயப் பரிமாற்றல் விகிதத்தில் ஆகும், கொ.ஆ.ச.வில் அல்ல.)[12] இது ஆப்பிரிக்காவிலேயே அதிகூடியதாகும்.[13]

.re என்பது ரீயூனியனுக்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயராகும். பிரான்சின் .fr என்ற ஆள்களப் பெயரும் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள்

ரீயூனியன் தீவில் ஆப்பிரிக்கர், இந்தியர்கள், ஐரோப்பியர்கள், மலகாசி, சீனர் ஆகியோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களின் உள்ளூர் பெயர்கள்: யாபு, காப்பிரிகள், மலபார்கள், சாராபுகள் (இருவரும் இந்திய வம்சாவழிகள்), மற்றும் சைனோசுகள் ஆகும். ரீயூனியனில் வாழும் மக்கள் ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய நாட்டில் இருந்து நூற்றாண்டுகளாகக் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இத்தீவு ஆரம்பத்தில் குடிகளற்ற நாடாக இருந்ததால், உள்ளூர் பழங்குடி மக்கள் எவரும் இங்கு இருக்கவில்லை. இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனைத்து இன மக்களும் தமக்கிடையே திருமணம் புரிந்து கலந்து வாழ்கின்றனர். முதலாவதாக இங்கு வந்தவர்கள் இந்தோ-போர்த்துக்கீச வம்சாவழியினர். இவர்கள் மடகாசுகர் பெண்களைத் திருமணம் புரிந்தார்கள்.

1958 பிரெஞ்சு அரசியலமைப்பின் படி, பிரான்சைப் போலவே இங்கு இனவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. இதனால் இனவாரியான மக்கள்தொகை அறியப்படவில்லை.[14] ஆனாலும் ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் ஐரோப்பியர் ஆவார்.[15] இந்தியர்கள் கிட்டத்தட்ட 25% உம், சீன வம்சாவழியினர் கிட்டத்தட்ட 3% ஆகும். ஆப்பிரிக்க-மலகாசி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இவர்களை விட வியட்நாமியர் சிறு எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.[16][17]

இந்திய வம்சாவழியினரில் தென்னிந்தியரும் குஜராத்தியரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களை விட பீகாரியர், மற்றும் பல இந்திய மாநிலத்தவரும் வாழ்கின்றனர்.[18] வடமேற்கு இந்தியாவில் இருந்து, குறிப்பாக குஜராத்தில் இருந்து ஓரளவு முசுலிம்களும் வாழ்கின்றனர். இவர்கள்சாராபுகள் என அழைக்கப்படுகின்றனர்.

எந்த இனத்தவர் என்ற பாகுபாடில்லாமல், இத்தீவில் பிறந்து வளர்ந்தவர்களை கிரியோல்கள் என அழைக்கின்றார்கள். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மை இனமாகும். கிரியோல்களை விட ஏனையோர் அண்மைக்காலத்தில் பிரான்சில் இருந்து குடிபெயர்ந்த சோரெல்சுகள், மற்றும் மயோட்டே, கொமொரோசு ஆகிய இடங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

வரலாற்றுரீதியாக மக்கள்தொகை

ஆண்டுமக்கள்தொகை ஆண்டுமக்கள்தொகை ஆண்டுமக்கள்தொகை
167190 1830101,300 1961349,282
1696269 1848110,300 1967416,525
1704734 1849120,900 1974476,675
17131,171 1860200,000 1982515,814
17172,000 1870212,000 1990597,823
172412,550 1887163,881 1999706,300
176425,000 1897173,192 2006781,962
177735,100 1926182,637 2011828,581
178961,300 1946241,708 2013840,974
182687,100 1954274,370
புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய கல்விக்கழகத்தின் அதிகாரபூர்வத் தரவுகள், அண்ணளவான அளவீடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன.

சமயம்

இரீயூனியனில் உள்ள இந்துக் கோவில்

இரீயூனியனில் பெரும்பாலானோர் கத்தோலிக்க மதத்தவர் ஆவர். இவர்களுடன் இந்து, இசுலாம், சீன நாட்டு சமயம், பௌத்தம் ஆகிய சமயத்தவரும் வாழ்கின்றனர். இங்கு அனைத்து சமயத்தவர்களும் அரசுத் தலையீடு இன்றி சுதந்திரமாக தமது சமயத்தைப் பேணி வருகின்றனர்.[19] பிரான்சில் சமயம் வாரியாக மக்கள் கணக்கெடுப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், ரீயூனியனிலும் மத ரீதியான தொகை அண்ணளவாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மொத்த மக்கள்தொகையில் கிறித்தவர்கள் 84.9% ஆகவும், இந்துக்கள் 6.7% ஆகவும், முசுலிம்கள் 2.15% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[20] இங்குள்ள பெரிய நகரங்களில் முசுலிம் பள்ளிவாசல்கள் உள்ளன.[21]

மொழி

பிரான்சிய மொழி ரீயூனியனின் அதிகாரபூர்வ மொழியாகும். ரீயூனியன் கிரியோல் மொழி இத்தீவின் நாட்டக மொழி, பெரும்பாலானோர் இம்மொழியை பேசுகின்றனர்.[22] இவற்றை விட, மாண்டரின், கேசியம், காந்தோநீசிய மொழி ஆகிய மொழிகள் சீன சமூகத்தினரால் பேசப்படுகிறது. ஆனாலும், சீன மக்களின் புதிய தலைமுறையினர் பொதுவாக பிரெஞ்சு, கிரியோல் மொழிகளையே பேசுகின்றனர். இந்தியர்களின் மொழிகளைப் பேசுவோரும் (குறிப்பாக தமிழ், உருது, குஜராத்தி) இங்கு குறைந்து வருகின்றனர். அரபு மொழி இங்குள்ள பள்ளிவாசல்களில் பயிற்றப்படுகிறது.

பிரெஞ்சு பாடசாலைகளின் பாடத்திட்டத்துக்கமைய, ஆங்கில மொழி இங்கு கட்டாய இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது, ஆனாலும், பிரான்சைப் போன்றே, மிகக் குறைவானோரே ஆங்கிலப் புலமையுள்ளவர்களாக உள்ளனர். சில பாடசாலைகளில் செருமன், எசுப்பானியம், தமிழ் மொழிகள் மூன்றாம் விருப்ப மொழிகளாகப் பயிற்றப்படுகின்றது.[18]

பொதுநலம்

இத்தீவில் பொதுநலத்திற்கு அச்சுறுத்தல் அதிகம் இல்லை. 2005/2006 காலப்பகுதியில் ரீயூனியனில் சிக்குன்குனியா நோய் கிழக்காப்பிரிக்காவில் பரவியது. இதனால் இத்தீவில் மூன்றில் ஒரு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பண்பாடு

இரீயூனியனின் கலாசாரம், பண்பாடு ஆகியன ஐரோப்பிய, ஆப்பிரிக்க, இந்திய, சீன, மற்றும் தீவுக்கான பண்பாடுகளின் கலப்பு ஆகும். பிரெஞ்சு கலப்பில் உருவான இரீயூனியன் கிரியோல் மொழி பரவலாகப் பேசப்படுகிறது. ஆப்பிரிக்க, இந்திய, சீன. ஐரோப்பிய கலப்பு உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.

போக்குவரத்து

றோலண்டு காரோசு வானூர்தி நிலையம்

ரீயூனியன் தீவில் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 2,784 கிமீ தூரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடருந்து சேவைகள் இங்கு இல்லை. ஆனாலும், மிகக் குறுகிய தூர சுற்றுலாப் பயணிகள் தொடருந்து சேவை உள்ளது. இத்தீவில் இரண்டு முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. தலைநகருக்கு அருகில் இருக்கும் றோலண்ட் காரோசு பன்னாட்டு வானூர்தி நிலையத்தினூடாக மடகாசுகர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், தீவின் தெற்கே சான் பியேர் நகரில் உள்ள பியேரேபொன்ட்சு வானூர்தி நிலையம் ஊடாக மொறீசியசு, மடகாசுகர் ஆகிய நாடுகளுக்கும் வானூர்தி சேவைகள் நடத்தப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. "Estimation de population au 1er janvier, par région, sexe et grande classe d'âge". INSEE. பார்த்த நாள் 2013-10-12.
  2. யூரோ நாணயத் தாள்கள் ஒவ்வொன்றிலும் ரீயூனியனின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
  3. Slaves, freedmen, and indentured laborers in colonial Mauritius By Richard Blair Allen. pg. 9
  4. Tabuteau, Jacques (1987) (in French). Histoire de la justice dans les Mascareignes. Paris: Océan éditions. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-907064-00-2. http://books.google.com/books?id=BmgwAAAAYAAJ. பார்த்த நாள்: 11 June 2011.
  5. "Histoire de La Réunion". Iledelareunion.net. பார்த்த நாள் 2013-03-12.
  6. Moriarty, Cpt. H.A. (1891). Islands in the southern Indian Ocean westward of Longitude 80 degrees east, including Madagascar. London: Great Britain Hydrographic Office. பக். 269. இணையக் கணினி நூலக மையம்:416495775. http://books.google.com/books?id=-NmhAAAAMAAJ&pg=PA269.
  7. "| Journal de l'île de la Réunion". Clicanoo.re. பார்த்த நாள் 2013-03-12.
  8. Thomas Staudacher (7 ஏப்ரல் 2007). "Reunion sees 'colossal' volcano eruption, but population safe". AFP. Archived from the original on 9 April 2007. http://web.archive.org/web/20070409021223/http://news.yahoo.com/s/afp/20070407/wl_afp/francereunionvolcano. பார்த்த நாள்: 18 ஆகத்து 2007.
  9. Jacques Libert. "la pluviométrie". Pedagogie2.ac-reunion.fr. பார்த்த நாள் 2013-03-12.
  10. The Great Bahamian Hurricanes of 1899 and 1932: The Story of Two of the ... - Wayne Neely - Google Boeken
  11. , 2012 Elefant Tours
  12. (பிரெஞ்சு) INSEE Réunion. "8.1 - ÉCONOMIE GÉNÉRALES" (PDF). பார்த்த நாள் 10 டிசம்பர் 2008.
  13. IMF. "World Economic Outlook Database". பார்த்த நாள் 10 டிசம்பர் 2008.
  14. SSRN-Why France Needs to Collect Data on Racial Identity - In a French Way by David Oppenheimer. Papers.ssrn.com.
  15. Holm, John A. (1989). Pidgins and Creoles: References survey. Cambridge University Press. பக். 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-35940-6. http://books.google.com/books?id=PcD7p9y3EIcC&pg=PA394&dq#v=onepage&q=&f=false.
  16. Clicanoo. "La Réunion Métisse".
  17. "Anthropometric evaluations of body composition of undergraduate students at the University of La Réunion" (2006). பார்த்த நாள் 2011-08-21.
  18. "NRI" (PDF). பார்த்த நாள் 2010-04-16.
  19. http://net-outremer.forumactif.com/gallery/la-Reunion/Religion-a-la-Reunion-pic_194.htm
  20. Religious Intelligence profile on Réunion
  21. Réunion - New World Encyclopedia
  22. "Ethnologue report (language code:rcf)". Ethnologue.com. பார்த்த நாள் 2010-04-16.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.