வான் போக்குவரத்து கட்டுப்பாடு

வான் போக்குவரத்து கட்டுப்பாடு (Air traffic control, ATC) அல்லது ஏடிசி என்பது புவித்தளத்தில் அமைந்த கட்டுப்பாட்டாளர்கள் நிலையத் தளத்திலும் வானிலும் வானூர்திகளை வழிகாட்டிட வழங்கும் சேவையாகும். இதற்காக கதிரலைக் கும்பா போன்ற பல்வேறு தொழினுட்பக் கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இச்சேவையின் முதன்மைப் பணி வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாது பிரிப்பதாகும். வானூர்திகள் நேரப்படி இயங்கவும், போக்குவரத்து சீராகவும் விரைவாகவும் செல்லவும் வானூர்தி ஓட்டுனர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து ஆதரவளிக்கவும் வான் போக்குவரத்து கட்டுப்பாடு முதன்மை பங்காற்றுகிறது. [1] ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏடிசி பாதுகாப்பு அல்லது தடுப்புக் காவல் பணிகளையும் மேற்கொள்கிறது. பிரேசில் போன்ற வேறுசில நாடுகளில் ஏடிசிப் பணிகளை படைத்துறையினரே மேற்கொள்கின்றனர்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகர ஷிபோல் வானூர்தி நிலைய வான்போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரங்கள்.
இந்தோனேசியாவின் யுவாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் போக்குவரத்து கட்டுபாடு கோபுரங்கள்.

உலகில் முதன்முதலாக வான் போக்குவரத்து கட்டுப்பாடு இலண்டன் கிரோய்டன் வானூர்தி நிலையத்தில் 1921ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று லாம்பெர்ட்-செயின்ட் லூயி பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறியப்படும் நிலையத்தில் வண்ணக்கொடிகளை வைத்து வானூர்திகளைக் கட்டுப்படுத்திய ஆர்ச்சீ லிக் குழுவினரே முதல் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்காக அறியப்படுகின்றனர்.

மோதல்களைத் தவிர்க்க வான் போக்குவரத்து கட்டுப்பாட்டில் பிரிப்பு என்ற சொல் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இரு வானூர்திகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வராதிருக்க பக்கவாட்டு, நீளவாக்கு மற்றும் நெடுக்குத்து அச்சுகளில் குறைந்த பிரிப்பை பயன்படுத்துகின்றனர். இன்றைய நவீன வானூர்திகளில் ஏடிசிக்கு மாற்றாக மோதல் தவிர்ப்பு அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன. பல நாடுகளிலும் ஏடிசி சேவைகள் பெரும்பான்மையான வான் பறப்புவெளி முழுமைக்கும் அனைத்து பயனர்களுக்கும் (தனியார், படைத்துறை மற்றும் வணிக பறப்புகள்) வழங்கப்படுகின்றன. கட்டுப்பாட்டாளர்களால் வானூர்திகள் பிரிக்கப்படுவதற்கு பொறுப்பாக உள்ள பறப்புவெளி கட்டுப்படுத்தப்பட்ட பறப்புவெளி எனப்படுகிறது. இதற்கு எதிராக ஏடிசியின் கட்டுப்பாட்டில் இல்லாது பறக்கக்கூடிய பறப்புவெளி கட்டுப்பாடற்ற பறப்புவெளி எனப்படுகிறது.

பறப்பின் தன்மை மற்றும் வானூர்தியின் வகைப்பாட்டைப் பொறுத்து வானோடிகளுக்கு பின்பற்ற வேண்டிய ஏடிசி ஆணைகளை இடுகின்றனர்; தவிர வானோடிகளுக்கு சீரான இயக்கத்திற்கு துணைபுரிய பறப்பு தகவல்களை வெளியிடுகின்றனர். இருப்பினும் அனைத்து நேரமும் வானூர்தியைக் கட்டுப்படுத்துகின்ற வானோடியே பறப்பின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பும் உடையவராவார்; இதனால் நெருக்கடி நேரங்களில் ஏடிசி ஆணைகளை இவர்கள் புறக்கணிக்கலாம்.

வான் போக்குவரத்து கட்டுப்பாடு பொறுப்புகள்

  • "புவித்தளக் கட்டுப்பாடு" - அனைத்து வானூர்திகள் மற்றும் பிற வண்டிகளின் நகர்வுகளை வான்கல வழிகள், செயலில் இல்லாத ஓடுதளங்கள், வானூர்தி நிறுத்துமிடங்கள் போன்றவிடங்களில் கட்டுப்படுத்துகிறது.
  • "அனுமதி வழங்கல்" - வானூர்திகளுக்கு வழித்தட அனுமதிகளை வழங்கும் பணியாகும். இது திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் பாதுகாப்பாக பறப்பதற்கு இது மிகவும் தேவையானதாகும். அனுமதி வழங்கல் பிரிவு புவித்தளக் கட்டுப்பாடுடனும் பரப்புக் கட்டுப்பாடு மையத்துடனும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும்.
  • "கோபுரக் கட்டுப்பாடு" - புறப்படும் வானூர்திகளுக்கும் வந்திறங்கும் வானூர்திகளுக்கும் அனுமதி வழங்குகிறது. ஓடுதளத்திலும் பறப்புவெளி போக்குவரத்துச் சுற்றிலும் உள்ள அனைத்து வானூர்திகளும் கோபுரக் கட்டுப்பாட்டினாலும் கட்டுப்படுத்தப்படும்.
  • "அணுக்கக் கட்டுப்பாடு" - வானூர்தி நிலையத்தின் அண்மையில் உள்ள பறப்புவெளியில் உள்ள அனைத்து வானூர்திகளுக்கும் பொறுப்பானது. நிரம்ப வானூர்திகள் ஒரே நேரத்தில் இறங்குவும் ஏறவும் கூடுமாதலால் இந்தப் பொறுப்பே ஏடிசி பொறுப்புகளில் மிகவும் கடினமானப் பொறுப்பாகும்.
  • "பரப்பு கட்டுப்பாட்டு மையம்" இரு வானூர்தி நிலையங்களுக்கிடையேயான கட்டுப்படுத்தப்பட்ட பறப்புவெளியில் வானூர்திகளை பிரித்து வைக்கின்றன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

வரலாறு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.