ஹென்றி டியூனாண்ட்

ஜீன் ஹென்றி டூனாந் (Jean Henri Dunant, மே 8,1828- அக்டோபர் 30, 1910)[1] செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து பெற்றார்[2].

ஹென்றி டியூனாண்ட்
பிறப்பு8 மே 1828
ஜெனீவா
இறப்பு30 அக்டோபர் 1910 (அகவை 82)
Heiden
படித்த இடங்கள்
  • Collège Calvin
பணிதொழில் முனைவோர், எழுத்தாளர்
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு
முதியவராக டூனாந்த்

செஞ்சிலுவைச் சங்கம் தோற்றம்

ஜெனிவாவில் பிறந்தவரான ஹென்றி டுனாந் வேலை காரணமாக 1859 இல் இத்தாலி நாட்டில் உள்ள சால்ஃபரீனோ என்ற நகருக்குச் சென்றார். அங்கு அப்போதுதான் போர் நடந்து முடிந்திருந்தது. போரின் காரணமாக ஏறக்குறைய நாற்பதாயிரம் பேருக்கும் மேல் மிக மோசமாக காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய யாரும் இல்லாமலும், உணவு அளிக்க யாருமில்லாமலும் அவதிப்பட்டனர். இதைப்பார்த்து பார்த்து மனம் வருந்திய ஹென்றி, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் திரட்டி, காயமுற்ற போர்வீரர்களுக்கு முதலுதவி செய்தார். இந்தப் பணியை மூன்று நாட்கள் சோர்வின்றி செய்தார்.

ஹென்றி தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, போரும் அதனால் காயமுற்றவர்களின் துண்பமும் இவர் மனதை விட்டு நீங்கவில்லை. அதன் பாதிப்பின் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதினார். இந்தூலில் ‘போரில் காயமுறுவர்களுக்கு உதவுவதற்காக எந்தச் சார்பும் இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

புத்தகம் வெளியாகி ஓராண்டுக்குப் பிறகு ஹென்றியின் எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜெனீவா மக்கள் நல அமைப்பின் தலைவராக இருந்த குஸ்தவ் மாய்னீர் என்பவருக்கு ஹென்றியின் இந்தக் கருத்துப் பிடித்துப்போனது. போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார். இந்தப் பரிந்துரைகள் 16 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி உருவானதுதான் செஞ்சிலுவைச் சங்கம். 1864-ம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்க அதிகாரபூர்வமாக 12 நாடுகள் ஒப்புக்கொண்டன. அடுத்து வந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்தச் சங்கத்தில் இணைந்தன.

அமைதிக்கான நோபல்பரிசு

ஜான் ஹென்றிக்கு செஞ்சிலுவைச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தகாரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட ஆரம்பித்த முதல் ஆண்டான 1901-லேயே அமைதிக்கான நோபல் பரிசை முதன்முதலில் பெற்றார். ஹென்றியின் பிறந்தநாளான மே எட்டாம் நாள், ஒவ்வொரு ஆண்டும் செஞ்சிலுவை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. ""Henry Dunant - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Henry Dunant - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  3. "மனிதநேய சங்கம்!". தி இந்து (தமிழ்) (2016 மே 4). பார்த்த நாள் 5 மே 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.