எலீ வீசல்

எலீ வீசல் (Elie wiesel, 30 செப்டம்பர் 1928 – 2 சூலை 2016) ஓர் அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர், யூதப் பேரழிவிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1986ஆம் ஆண்டு பெற்றவர், 40இற்கும் மேற்பட்ட புனைவு, அபுனைவு நூல்களை எழுதியவர்.

எலீ வீசல்
2012 இல் வீசல்
பிறப்புஎலியசர் வீசல்
செப்டம்பர் 30, 1928(1928-09-30)
சிகெட், உருமேனியா
இறப்புசூலை 2, 2016(2016-07-02) (அகவை 87)
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா
இருப்பிடம்பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
தேசியம்அமெரிக்கர்
இனம்யூதர்
பணிஅரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
மேரியன் எர்ஸ்டெர் ரோஸ்[1]
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு
குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம்
காங்கிரசின் தங்கப்பதக்கம்
கிராண்ட் ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஒஃப் ஸ்டார் ஓஃப் ருமேனியா
லீஜியன் தே ஆனர்
காண்டர்பரி பதக்கம்

இளமைக் காலம்

எலீ வீசல் உருமேனியாவில் ஒரு சிற்றூரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். 1944ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நாசிக்கள் செய்த மனிதப் படுகொலைகளை நேரில் பார்த்து மனம் கலங்கினார். யூத இன மக்கள் போலந்தில் உள்ள ஆஸ்விட் (Auschwitz) என்னும் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். எலீ வீசலும் அவருடைய பெற்றோர்களும் அங்கு அனுப்பப்பட்டனர். அங்குக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அவருடைய தாயும் தங்கையும் இறந்தனர். பின்னர் 1945இல் இவருடைய தந்தையார் பட்டினியாலும் நோயினாலும் இறந்தார். இந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் 17 அகவைச் சிறுவன் எலீ வீசல் கண்கூடாகப் பார்த்தார். இவரின் இரண்டு தமக்கைகள் உயிர் பிழைத்தனர்.

எழுத்துப் பணி

நேசப் படைகளின் உதவியோடு விடுதலையான எலீ வீசல் 1948இல் பாரிசுக்குச் சென்றார். அங்குப் பிரான்சிய மொழியைக் கற்றுக் கொண்டார். இதழாளராக வேலையில் சேர்ந்தார். 'லார்ச்' (L'arche) என்னும் பிரான்சிய யூதச் செய்தித்தாளிலும் இசுரேலியப் பிரான்சியச் செய்தித்தாள்களிலும் எழுதத் தொடங்கினார்.

வதை முகாம்களில் நிகழ்ந்த வன்செயல்களையும் கொடுமையான அனுபவங்களையும் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும் எழுத அவருக்கு மனம் இல்லை. ஆனால் 1952இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா மாரிக் (Fancois Mauriac) என்னும் அறிஞரின் தொடர்பும் நட்பும் தூண்டுதலும் தாம் அடைந்த வதை முகாம் பட்டறிவுகளை எழுதும் ஊக்கத்தை வீசலுக்கு அளித்தன.

நூல்கள்

முதலில் இத்திய மொழியில் 900 பக்கங்களில் தம் வதை முகாமின் அனுபவங்களை 'உலகம் அமைதியாக உள்ளது' என்னும் தலைப்பில் எலீ வீசல் எழுதினார். அது சுருக்கமாக புயனோஸ் அயர்சில் வெளிவந்தது. மீண்டும் அதைப் பிரான்சிய மொழியில் எழுதினார். பின்னர் அந்நூல் ஆங்கிலத்தில் குறுபுதினமாக 'இரவு' (Night) என்னும் பெயரில் வெளியாகியது. இந்நூல் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தனது நினைவுக் குறிப்புகளை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இவர் பாசுடன் பல்கலைக்கழகத்தில் மாந்தவியல் துறையில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணி புரிந்தார். நியூயார்க் நகரப் பல்கலைக்கழகம், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு, யேல் பல்கலைக்கழகம் எனப் பல்வேறு கல்வி மையங்களிலும் பணியாற்றினார்.

நோபல் பரிசு

வன்முறை, ஒடுக்குமுறை, இனவெறி ஆகியவற்றிற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததற்காக 1986ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு எலீ வீசலுக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான விருதுகளும் ஏராளம் பெற்றார்.

மனித உரிமைக் குரல்

யூதப் பேரழிவு குறித்து ஏராளமாகப் சொற்பொழிவுகள் ஆற்றிய வீசல் இசுரேல் சோவியத்து மற்றும் எத்தியோப்பிய யூதர்களின் அவல நிலைகள் பற்றியும் தென்னாப்பிரிக்க நிறவெறிக்குப் பலியானவர்கள், குர்த் இன மக்கள் ஆகியோரின் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ருமேனியாவில் யூதர்களைக் கொன்று குவித்தபோது உண்மையறியும் குழுவுக்குத் தலைமை தாங்கி ருமேனிய அரசின் அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

1955இல் அமெரிக்காவில் குடியேறிய எலீ வீசல் 2016ல் அமெரிக்காவின் மன்ஹாட்டன் தீவில் இறந்தார்.

மேற்கோள்

உசாத்துணை

எலீ வீசல் உரையாடல்கள், தமிழில் லதா ராமகிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83

  1. "Central Synagogue". centralsynagogue.org.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.