வஞ்சிரம்

வஞ்சிரம் அல்லது அறுக்குளா (Seer fish) என்பது கானாங்கெளுத்தி குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இதில் 3 பேரினங்களாக மொத்தம் 21 இனங்கள் உள்ளன.

வஞ்சிரம்
இந்தோ-பசிபிக் வஞ்சிரம்
Scomberomorus guttatus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: கதிர்முள் துடுப்பி
வரிசை: கானாங்கெளுத்தி வடிவி
குடும்பம்: கானாங்கெளுத்தி வகையி
பேரினம்: கானாங்கெளுத்தி இனம்
துணைப்பேரினம்: Scomberomorini

குணங்கள்

கடலில் வாழும் இந்த மீன்கள் வேகமாக நீந்தும் திறன் பெற்றவை ஆகும். மேலும் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் கடுமையாகப் போராடும் குணம் கொண்டவை. இவற்றின் பற்கள் கூர்மையாக இருக்கும். எனவே இவற்றை மீனவர்கள் கவனமாகக் கையாளுகின்றனர். இதன் உடல் நீண்டு காணப்படும். 4 முதல் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. தாடைகளின் பற்கள் கடினமானது. போலிச் செவுள்கள் உண்டு. இரு முதுகுத் துடுப்புகளை பெற்றுள்ளது. இவற்றில் முதலாவது துடுப்பு வலிமை அற்றதாகவும், இரண்டாவது துடுப்பிற்குப் பின் 7 அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் துடுப்புகள் உள்ளன. இவை விரைவாக நீந்தும் ஆற்றல் உடையவை. மேலும் நீரின் மட்டத்திலிருந்து மிக உயரத்திற்கு தாவி துள்ளி விளையாடும் ஆற்றல் உடையவை. மத்தி, காரப்பொடி போன்ற மீன் கூட்டத்தையும் இரால்களையும் பிடித்து உண்பதற்கு துரத்திச் செல்லும் இயல்புடையது. இந்தியப் பெருங்கடலில் வஞ்சிரம் மிகுந்து காணப்படும். கடலின் திறந்த பரப்பைவிட கரையோரப் பகுதிகளில் அதிகம் காணப்படும். [1]

உணவாக

சுவை மிகுந்த வஞ்சிரம் மீன்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. இவை கேரளாவில் நெய்மீன் என்றும் இலங்கையில் தோரா என்றும் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. அறிவியல் களஞ்சியம் - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு எண் 344 - தொகுதி 18 - பக்கம் 358.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.