கடல் கொவிஞ்சி

மன்னார் வளைகுடாவில் உள்ள தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் உயர் ரகமாக கருதப்படுவது "கடல் கொவிஞ்சி'கள். இந்தியாவில் மன்னார் வளைகுடா பகுதியில் தான் அதிகம் உள்ளன.

இதிலும் 12 வகைகள் உள்ளன. மீன் இனத்தை சேர்ந்த இவை கடல் குதிரையின் ரகமாகும். இவற்றின் முக அமைப்பு கடல் குதிரை போல இருப்பதால் அதன் ரகத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் இரண்டு தாடைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால் உணவுகளை உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. பவள பாறைகள், கடல்புற்கள் மத்தியில் வசிக்கும் இவைகள் ,அங்குள்ள கழிவுகள், மிதவை உயிரினங்களை உண்டு வாழ்கின்றன.

கடல்குதிரை ரகத்தை சேர்ந்திருந்தாலும் படுக்கை வசமாக மீன்களை போல நீந்தி செல்லும். மன்னார் வளைகுடாவில் இந்த உயிரினத்தை பிடித்தால் , வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தில் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபாரம் என கடுமையான தண்டனைகள் உள்ளன. தெற்காசிய நாடுகளில் இதை ஆண்மை ஊக்கியாக கருதி பொடியாக்கி "சூப்' வைத்து குடித்து வருகின்றனர். நல்ல விலை கிடைக்கும் என்பதால் இந்த இனம் தடையை மீறி தொடர்ந்து கடத்தப்படுகிறது. உடல் முழுவதும் எலும்புகளால் ஆன இவற்றை காய வைத்து கருவாடாக மாற்றுகின்றனர். தசைகள் இல்லாததால் கருவாடாக ஆன பிறகும் உருவம் மாறுவதில்லை. வெளிநாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதியாகிறது. இதனால் இவற்றின் அழிவு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.