விஸ்வநாத தாஸ்
எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் (சூன் 16, 1886 - திசம்பர் 31, 1940) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞரும் ஆவார்.[2]
எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் S. S. Vishwanatha Doss | |
---|---|
![]() | |
பிறப்பு | எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் சூன் 16, 1886 [1] சிவகாசி |
இறப்பு | திசம்பர் 31, 1940 54) சென்னை | (அகவை
இருப்பிடம் | திருமங்கலம், மதுரை |
விஸ்வநாத தாஸ் சூன் 16, 1886 ஆம் ஆண்டு சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக சிவகாசியில் பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார்.
"கதர்கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.
இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனைப் பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
மறைவு
1940 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் தியதி, தனது 54ஆவது வயதில், முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.[3]
சுதந்திர போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பிறந்த தினம் சூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது.[4] [5]
நினைவு இல்லம்
தமிழ்நாடு அரசு தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் - நூலகம் அமைத்துள்ளது. இங்கு தியாகி விஸ்வநாததாஸின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
- "தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம் இன்று". தி இந்து. பார்த்த நாள் 9 சூலை 2017.
- "Reducing national icons to caste leaders". THE HINDU. பார்த்த நாள் 9 சூலை 2017.
- முத்தையா (ஜூன் - ஆகஸ்ட் 2006). "விஸ்வநாததாஸ்". குதிரைவீரன் பயணம். பார்த்த நாள் ஆகஸ்ட் 31, 2012.
- "தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா". தினமணி. பார்த்த நாள் 9 சூலை 2017.
- "Viswanatha Das remembered". THE HINDU. பார்த்த நாள் 9 சூலை 2017.
வெளி இணைப்புகள்
- விஸ்வநாததாஸ் நாடகக் கலைஞர்கள் வரலாறு கீற்று இணையதளம்
- தியாகி விஸ்வநாததாஸின் வரலாறு -திருமங்கலம் புகைப்படங்கள்-முழுத்தொகுப்பு
- தியாகி விஸ்வநாததாஸ் பற்றிய கட்டுரை - கீற்று மின்னிதழில்
- நாளிதழில் தியாகி விசுவநாததாசு குறித்த செய்தி
- தியாகி விஸ்வநாததாசின் 125 வது பிறந்த தினவிழா