லீலாவதி

லீலாவதி ( 27 செப்டம்பர் 1957 - 23 , ஏப்ரல் 1997), மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர்.[1]

லீலாவதி
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 27, 1957(1957-09-27)
மதுரை, தமிழ்நாடு
இறப்பு 23 ஏப்ரல் 1997(1997-04-23) (அகவை 39)
வில்லாபுரம், மதுரை, தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) குப்புசாமி

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை

மதுரை மாநகரில் கைத்தறி தொழிலை பிராதனமாகச் சார்ந்திருக்கும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்-இந்திரா தம்பதியரின் மூன்றாவது புதல்வியாக 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று பிறந்தார். அவர் 10வது வகுப்பில் படிக்கும்போது குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் நெசவு வேலை செய்தார். பெற்றோர் நிச்சயித்தபடி அவருக்கும் குப்புசாமிக்கும் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியென்று திருமணம் நடைபெற்றது. குப்புசாமி - லீலாவதி தம்பதியினருக்கு கலாவதி, துர்கா, டான்யா என்ற மூன்று மகள்கள் பிறந்தனர் . வில்லாபுரத்தில் 32 ஒட்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரே ஒரு அறையில் ஐவரைக்கொண்ட இந்தக் குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவில் நெசவுத்தறி, அதைச்சுற்றிப் பெட்டி படுக்கை அங்கேயே அடுப்பை வைத்து சமையல், இரவில் தறிக்கு கீழேயே உறக்கம் என்ற நிலையில் அவரது குடும்பம் இருந்தது.[2]

அரசியல் வாழ்க்கை

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலூக்கமுள்ள குப்புசாமி, தனது மனைவி லீலாவதிக்கு படிப்படியாக அரசியல் உணர்வு ஏற்படுத்தினார். 1987 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், பின்னர் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதர் சங்கக் கைநெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில துணைத் தலைவரானார்; மாவட்டப் பொருளாளரானார்; மாநிலக்குழு உறுப்பினரானார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரானார்.

மாமன்ற உறுப்பினர்

1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலின் போதுதான் முதன்முறையாக பெண்களுக்கென்று மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி மதுரை மாநகராட்சிக்கான 72 வட்டங்களில் 24 வட்டங்கள் பெண்களுக்கென்று நிச்சயிக்கப்பட்டன. வில்லாபுரமும் இத்தகைய வட்டங்களில் ஒன்று. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தார்.[3]

இறப்பு

தனது வார்டில், (வில்லாபுரம்) மாநகராட்சிக் குடிநீர் வசதிக்குத் தடையாக இருந்த சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு ஆழ்துளை கிணற்று (Borewell) நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர். இதனை தட்டிக் கேட்ட காரணத்தால், லீலாவதி, 23 , ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிக் கொல்லப்பட்டார்.[4] சுமார் 10 கி.மீ. தூரம் கடந்து இரவு ஏழு மணியளவில் மூலக்கரை இடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்ட லீலாவதியின் உடலுக்கு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பி. மோகன் தீ மூட்டினார். முதலமை‌ச்ச‌ர் மு. கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையில் இருந்த லீலாவதி கொலைக் குற்றவாளிகளில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.[5] 2015 இல் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் நன்னடத்தை விதிகளை மீறினார் என ஒரு குற்றவாளியான நல்லமுத்து மீண்டும் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார்[6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.