மதுரை முத்து (மேயர்)

மதுரை முத்து (1915-1984) ஒரு தமிழக அரசியல்வாதி; மதுரை மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

மதுரை முத்து தொடக்கக் காலத்தில் மதுரை ஹார்வி மில்லில் தொழிலாளியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் தீவிரமாகப் பங்கு கொண்டதால், ஆலை நிர்வாகம், அவரைப் பணி நீக்கம் செய்தது. பின் அதே ஆலையின் எதிரே தேநீர் கடை நடத்திக் கொண்டே கட்சிப் பணியாற்றினார். முத்து சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவர்

மேயர்

1971 இல் மதுரை நகராட்சி 1971-ஆம் ஆண்டு மாநகராட்சித் தரத்திற்கு உயர்ந்தது. அப்போது மதுரை நகராட்சித் தலைவராக இருந்த மதுரை முத்து, மேயராகப் பொறுப்பேற்றார். 1978-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி உறுப்பினர்கள் பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி 1978 ஆம் ஆண்டில் மதுரை முத்து, முதலிரண்டு ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகித்தார்.[1].[2].

அ.தி.மு.க.வில்

1972-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பெரும் வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவர் மு. கருணாநிதி “மதுரை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றதால், மதுரை மாவட்ட திமுகத் செயலாளரான மதுரை முத்துவுக்குக் கருணாநிதியோடு பிணக்கு ஏற்பட்டது. முத்து திமுகவில் இருந்து விலகி, அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

மீண்டும் தி.மு.க.வில்

பின்னர் இலங்கைப் பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, மீண்டும் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.[3]

நினைவுச் சின்னங்கள்

மதுரை முத்துவை நினைவு கூரும் வகையில், மதுரையில் ஒரு மேம்பாலத்திற்கு முத்து மேம்பாலம் எனப் பெயரிட்டு மதுரை மாநகராட்சி மரியாதை செய்தது.[4]

குடும்பம்

இவர் மனைவி பெயர் இரஞ்சிதம். இவர்களுக்கு 26-5-1956இல் பெண்குழந்தை ஒன்று பிறந்தது.[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.