ரா. கிருஷ்ணசாமி

ரா. கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு (சனவரி 5 - 1902 - அக்டோபர் 30, 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின், முதல் சட்டமன்றத்திற்கு 1952 இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும்,[1] 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும்,[2] 1962 சட்டமன்றத் தேர்தலில், ராஜபாளையம் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ரா. கிருஷ்ணசாமிநாயுடு
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவர்
பதவியில்
1962–1967
முன்னவர் ஓ. வி. அழகேசன்
பின்வந்தவர் சி. சுப்பிரமணியம்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 5, 1902(1902-01-05)
புது.ராமச்சந்திரபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், தமிழ்நாடு
இறப்பு அக்டோபர் 30, 1973(1973-10-30) (அகவை 72)
பி.ராமசந்திரபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஆண்டாள்
பிள்ளைகள் 4 (மகன்கள்)
4 (மகள்கள்)
இருப்பிடம் திருவில்லிபுத்தூர், தமிழ்நாடு
சமயம் இந்து

வாழ்க்கைச் சுருக்கம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பி. ராமசந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார்.

அரசியல் பங்களிப்பு

அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு

இவர் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 1926இல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில், சேலம் பெ. வரதராஜுலு நாயுடு தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா. கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.[4]

15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமான செய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார்.

வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார். இவர் கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

திரு ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை

நினைவிடம்

ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் மார்பளவு சிலை.
இடம்: ரா.கி.பவனம், மேலரத வீதி,திருவில்லிபுத்தூர்

ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவிடம்

வாழ்த்து கவி

சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி
பார்வையில் எளியராகி பண்பில் உயர்ந்தோராகி
நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி
தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள்ராகி

-புலவர் விவேகானந்தன்-

இரங்கற்பா

ரா.கி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரங்கற்பா

நாணய விளக்கே ! ஓயா நற்பணிக் குன்றே ! என்றும்
ஆணவமில்லா வேந்தே !
அயர்வில்லா தேசபக்தி.
நீணெடுங்காலம் கொண்டோய் !
நீ எமை விட்டுச் சென்று
நாணடந்தாலும் நாங்கள்
நாளெல்லாம் நினைப்போம் உன்னை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.