இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பினை பற்றியது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்

  1. சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத்தேவரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
  2. 1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர்,பெண்களும் பங்கு கொண்டனர்.
  3. ராணி சென்னம்மா கர்நாடக மாநிலம் 1824-1829
  4. ராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்
  5. ஜல்காரி பாய் 1857 - 58 ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ஜல்காரி பாய், ராணி லக்ஷ்மிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கினார்.
  6. ராணி அவந்திபாய் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார்
  7. ஜானகி ஆதி நாகப்பன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர்.
  8. அன்னி பெசண்ட் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.
  9. சரோஜினி நாயுடு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.
  10. ருக்மிணி லட்சுமிபதி 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்
  11. கஸ்தூரிபாய்காந்தி மகாத்மாகாந்தியின் துணைவியார்.
  12. விஜயலக்குமி பண்டிட் ( ஜவகர்லால் நேருவின் சகோதரி)
  13. சுசேதாகிருபளானி (ஆச்சாரிய கிருபளானியின் துணைவியார்)
  14. மீராபென் (1892 – 1982) ஆங்கிலேய பெண்மணி இந்தியாவில் தங்கி இருந்தபோது மகாத்மாகாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார் ,கிருஷ்ண பக்தையான இவருக்கு மகாத்மாகாந்தி வழங்கிய பட்டம் மீராபாய்.

மோனிக்கா இராமேஸ்வரம்

சுதேசி மற்றும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.

சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கிகொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார்.ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறுதான் ஒவ்வொரு தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அர்ப்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர். தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது.

சுயஆட்சி இயக்கம்

சமூக கட்டுப்பாட்டிற்குள்ளாகி அடைப்பட்டுக் கிடந்த தமிழக மகளிரை அரசியலில் ஈர்த்தது அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து அம்மையாரால் காங்கிரஸின் ஆதரவோடு 1916-இல் சென்னையில் தொடங்கப்பட்ட சுயஆட்சி இயக்கமாகும். ஆங்கில அரசை எதிர்த்து இந்தியா சுய ஆட்சி பெறவேண்டுமென்று போர்க்கொடி தூக்கியமையால் இவர் சிறை வைக்கப்பட்டார். இவ்வம்மையாரின் கைது ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட இப்போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்து படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார்.அம்மையார் கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் செம்டம்பர் 14-ஆம் நாள் பொதுக் கூட்டம் கூட்டினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அம்மையார் விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஒத்துழையாமை இயக்கம்

1920-ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர். கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.

இவ்வியக்கத்தின் இன்னொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணவேண்டுமென்பதோடு, நம்மக்கள் பொருளாதார தன்னிச்சை பெறவேண்டும் என்பதாகும். இதை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். அம்மையார் தன் கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றவும் செய்து வரலானார். தனது கணவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் வரை ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்தும், அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். இவர் சிறந்த பேச்சாளர். தன் சொற்பொழிவுகளில் சில சமயங்களில் 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்வார்.ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் அங்கத்தினர்களாகவும் ஆக்கினார்..

கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் மதுரையில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் சுமார் முப்பது பெண்மணிகள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர். போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம் தான். அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.

நீல் சிலை சத்தியாக்கிரகம்

இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த சம்பவம், திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட "1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு" என்ற வீரசாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட புத்தகமாகும். புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்துதவினார்.இப்புத்தகத்தை படித்தபின் தான் கர்னல் நீல் அவர்கள் 1857 புரட்சியின்போது செய்த கொடுமைகள் தெரிய வந்தன. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே ரெ. சிதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர். அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்டம்பர் 1-ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலும், 7 ரூபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார். இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும் அவர் மகள் அம்மாகண்ணு அம்மாள் என்ற 12 வயது சிறுமியும் செப்டம்பர் 6-ஆம் நாள் கைது செய்யப்பட்டு அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு அம்மாவுக்கு நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைப்பது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரை தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர்.

சைமன் குழு எதிர்ப்பு

தமிழ்நாட்டில் சைமன் குழு எதிர்ப்பு நடவடிக்கைகளை முதலில் எடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களே. 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், பெண்கள் அடங்கிய குழு ஒன்றை சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காகத் தோற்றுவித்தார்.ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றில் யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. ருக்மணி லட்சுமிபதி மற்றும் பலர் சொற்பொழிவாற்றினார்கள்.சென்னையைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறாதது. மற்றொன்று பெண்கள் இடம் பெறாதது

சட்டமறுப்பு இயக்கம்

சட்ட மறுப்பு இயக்கத்தில் சென்னை மாகாணத்தில் தண்டிக்கப்பட்டவர்கள்

மாவட்டம்சாதாரண சட்டம்தொல்லை மற்றும் புறக்கணிப்பு தடுப்பு அவசரச் சட்டம், 1932 பிரிவு-5,சட்டவிரோதமாக துண்டுதல் அவசரச்சட்டம் 1932 பிரிவு-3
1 அனந்தப்பூர்6--
2 வடஆற்காடு3120-
3 வெல்லாரி--4
4 செங்கல்பட்டு-35
5 சித்தூர்616
6 கோயம்பத்தூர்352-
7 கடப்பா---
8 கஞ்சம்87239
9 கிழக்கு கோதாவரி171210
10 குணடூர்98511
11 மேற்கு கோதாவரி6447
12 தென்கனரா131-
13 கிருஷ்ணா3447
14 கர்னூல்15-
15 மதுரை467-
16 மெட்ராஸ்2411-
17 மலபார்3541-
18 நெல்லூர்4--
19 நீலகிரி---
20 ராம்நாடு322-
21 சேலம்2256-
22 தஞ்சாவூர்5110-
23 திருநெல்வேலி158-
24 திருச்சி95-
25 விசாகப்பட்டிணம்116-
ஆண்கள்41726111
பெண்கள்33293
மொத்தம்45029014

ஆதாரம்: அரசு ஆணை எண்.386அஇ பொது துறை இ 7-03-1932

சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைக்குள்ளானார்கள். வேலூர் மத்தியச் சிறையிலுள்ள பெண் அரசியல் கைதிகளிடம் குங்குமமும் அவர்கள் கையிலணிந்திருந்த வளையல்களும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டன.அவர்களுக்கு அளிக்கப்பட்ட படுக்கைகள் மிகவும் அசுத்தமாக இருந்தன. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு குளிக்கக் கொடுக்கும் எண்ணெய் ஒருநாளைக்குக் கூட போதுமானதாக இராது. சாப்பிடக் கொடுக்கும் சாதத்திலும், மாவிலும் பூச்சிகள் நிரம்பி இருக்கும். நூறு பெண்கள் வரை ஒரு கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். கல் உடைத்தல், கம்பளி நெய்தல் போன்ற வேலைகள் செய்யவேண்டும். சென்னை குற்றவாளிகள் திருந்துவதற்கான சிறையில் அரசியல் கைதிகளும் மற்ற குற்றவாளிகளும் சேர்ந்து ஒரே பிரிவில் பன்னிரெண்டு பேர் தூங்க வேண்டும். இச்சத்தியாக்கிரகத்தில் சென்னை ராஜதானியில் மட்டும் பிப்ரவரி மாதம் 1933 வரை கைதாகி சிறை சென்றவர்கள் எண்ணிக்கை 13674. அவர்களில் 633 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அதிக அளவு ஈடுபட்ட போராட்டம் இதுவேயாகும். 1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாடு சட்ட மறுப்பு போராட்டம் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்து காந்தியடிகளிடம் சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது. காந்தியடிகள் வகுத்த திட்டங்களை அப்போதைய வைசிராய் இர்வின் பிரவு நிராகரித்தவுடன் தான் அறிவித்தபடி அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுமார் 150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டீ என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார். அச்சம்பவத்தில் ஏராளமான சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. உடனே தேசமெங்கும் சுதந்திர ஆர்வம் பொங்கி எழுந்தது.தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று ராஜகோபாலாச்சாரி அவர்கள் விரும்பினார். தஞ்சாவூரிலுள்ள வேதாரண்யம் கடற்கரையில் உப்பெடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1930 ஏப்ரல் 13-ஆம் தேதி வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சத் தொடங்கியபோது கைது செய்யப்பட்டார். அடுத்து கே. சந்தானம் அவர்கள் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ருக்மணி லட்சுமிபதி அம்மையாரும் உடன் ஒத்துழைத்தார். இவ்வம்மையார் 1929-ஆம் ஆண்டில் "சென்னை இளைஞர் சங்கம்"’ என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் தேச பக்தியை ஏற்படுத்த உழைத்தார்.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தினார். இவர் இருநூறு ஆண் சத்தியாகிரகிகள் மத்தியில் ஒரே பெண.; முகாமில் ஆண்களுடனேயே தங்குவார். இவர் அரசு அலுவலர்கள்; வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் அரசாங்கத்திடம் கொண்டுள்ள பற்று குறைந்து தேசபக்தி ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சத்தியாக்கிரகத்தை அடக்குவதற்காக, மே மாதம் 14-ஆம் நாள் அம்மையார் அவர்கள் கைது செய்யப்பட்டு ஒருவருடம் சாதாரண சிறைத் தண்டனையில் தஞ்சாவூர் சிறையில் வைக்கப்பட்டார். வேதாரண்யத்தில் சத்திக்யாகிரகம் நடந்து கொண்டிருந்தபோது சென்னை நகரிலும் தி. பிரகாசம் அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. துர்காபாய் அம்மாள் என்ற பெண் தொண்டர் தலைமை ஏற்று உதயவரம் என்ற இடத்தில் முகாம் ஏற்படுத்தினார்கள். மே மாதம் இரண்டாம் நாள் இவ்வம்மையார், கிருஷ்ணம்மா மேலும் சில பெண்கள் உப்புச் சட்டத்தையும், தடையுத்தரவையும் மீறி; சென்னை சாந்தோம் கடற்கரையில் உப்புக் காய்ச்சத் தொடங்கியபோது போலீஸார் அவ்வுப்புப்பானைகளை உடைத்ததோடு கூட்டத்தையும் கலைத்தனர்.துர்காபாய் அம்மையார் வட ஆற்காட்டிற்குச் சென்று ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பின்னர் மே மாதம் 25-ஆம் தேதி உப்புச் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார். காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க, கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல் செய்யும் போராட்டத்திலும், கதர் உற்பத்தியிலும் பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள் கடமை என்னவென்றால் வியாபாரிகளை அணுகி அவ்வியாபாரத்தை விட்டுவிடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்குமாறும் அறிவுரைக்க வேண்டும். இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடை செய்யவேண்டும். இதுவே காந்தியடிகளின் அறிவுரை. இவ்வறிவுரைக்கு இணங்க தமிழகப் பெண்கள் காங்கிரஸ் கமிட்டிகளில் சேர்ந்து இப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இவர்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும், சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாது மேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் முதன்மை வாய்ந்தவர் சென்னை எஸ். அம்புஜம்மாள் ஆவார். இவர் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் விருப்பத்திற்கு மாறாக காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இவரும் ஞானம்மாள மற்றும் இதர பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் மறியல் செய்தனர். இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. எனினும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது அரசு அம்மையாரை மட்டும் கைது செய்யவில்லை. ஆனால் அவரோடு உழைத்த ஏழு பெண்களும் கைதானர்கள். அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பி.லீலாவதி, லலிதா பிரபு ஆகியோரை தலைச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் காவலர்களால் அவர்களது தாலி அறுக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் அவ்விடம் "தாலியறுத்தான் தலைச்சேரி" என்று வழங்கலாயிற்று.

கல்லூரி மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் 1930-ஆம் ஆண்டு செப்படம்பர் 3-ஆம் நாள் தொடங்கினார். அம்மையாரும் அவரோடு சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களும், கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிப்பதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் அம்மையார் அவர்கள் போராட்டம் தொடங்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். இதைக் கண்டித்து சென்னை இராணிமேரிக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரியைப் புறக்கணித்தனர்.வா.வே.சு. ஐயர் மனைவி பத்மாவதி அம்மாவும் வேறு சில பெண்களும் தடை உத்தரவை மீறித் தேசிய கொடி வணக்கம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் யாவும் நடைபெறும். வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். ராட்டையும்; கையுமாகவே அனைவரும் தென்பட்டனர். தினசரி நடைபெறும் கூட்டங்களில் சத்தியாக்கிரக நிதிக்காக பணமும், காசும், நகையும், சாமான்களும் பலர் கொடுத்தனர். பலர் சிறை சென்றனர். பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனை பெற்றார். அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை துறந்தனர், சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள். காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை துறந்தார்.

கைதானவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுதலையடைந்தனர். இவ்வொப்பந்தத்தின்படி நாடு முழுவதும் சாத்வீக மறியல் தொடங்கப்பட்டது. மதுரையில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் மறியல் செய்தனர். இது தொடர்பாக மதுரை பத்மாசனி அம்மாள், சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்கள் குறிப்பிடத் தக்கவை.சென்னை நகரில் இப்போராட்டம் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே நடத்தப்பட்டது. அவர்களுக்கு துர்காபாய் அம்மாளும், திருமதி கஸினும் தலைமை தாங்கினார்கள். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை நிராகரித்து சாத்வீக மறியல் செய்தவர்களில் பலரை அரசாங்கம் கைது செய்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாவும், திருவல்லிக்கேணியை சேர்ந்த கமலாபாயும் ஆவார்கள். இவர்களுக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணாபாயும் வேறு இரண்டு பெண்களும், எண்பது தொண்டர்களும் சென்னை ராட்டன் கடை வீதி துணிக்கடைகளை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கபடபட்டார்கள், இவர்களின் முயற்சியால், ஏராளமான அந்நியத் துணி வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடினர்.

1932-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக அரசு நடந்து கொண்டமையால் காந்தியடிகள் காரிய கமிட்டியுடன் ஆலோசித்து போராட்டத்திற்கான பல திட்டங்களை வகுத்தார். இதை அறிந்த வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் வைத்தார். இச்செய்தி எட்டியதும் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். நாடு முழுவதும் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியது. முக்கிய அங்கத்தினர்களும், தலைவர்களும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் குழுக்களை சட்ட விரோதமான ஸ்தாபனம் என்று அறிவித்து அவைகள் கலைக்கப்பட்டன.

தமிழகத்தில், காந்தியடிகள் கைது மக்களை திரண்டு எழச் செய்தது, காங்கிரஸ் நியமித்துள்ள பிரதிநிதிகளான பத்மாசனி அம்மாள், தாயம்மாள் மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகிய முப்பது பெண்கள் மதுரையில் மட்டும் கைதாகி சிறை சென்றனர்.இரண்டாவது தடவையாக 1932 ஆம் ஆண்டில் அம்புஜம்மாள் துணிக்கடை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவராவார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள்.

தேசபக்தி பாடல்கள்

சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் தனிஆர்வம்காட்டி வந்தபெண்களில் கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாளும் சிறப்புடையவர்கள. இவாகள் கணீரெனப் பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட தொண்டர்கள் ஏராளம். பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்றவர் கோதை நாயகி. காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம்பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும். மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய பாடல்களான

  • காந்தியோ பரமஏழை சந்நியாசி
  • தாயிடம்அன்பில்லாத சன்மம் வீணே
  • நம்பிக்கை கொண்டெல்லோரும ராட்டை சுற்றுவோம்
  • காந்தி லண்டன் சேர்ந்தார்

என்ற நான்குபாடல்களையும் கே.பி.சுந்தராம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார்.

உப்பு சத்யாக்கிரகத்தையொட்டி காந்தி சிறை சென்ற போது "காந்தியோ பரம ஏழை சந்நியாசி" என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசைத்தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது. காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார். 1931 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தினார். தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்பூரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில் விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார். 1932 ஆம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களை தூக்கிலிட்டு கொன்றபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான “பகத்சிங், ராச குரு, சுகதேவ் சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா …பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை பாரத மாதா” என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது. இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்குவர்.49

எஸ்.ஆர்.ரமாமணிபாய் பாடிய

  • "ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டே

சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே"

என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. மதுரை எம்.கண்ணம்மாள் பாடிய "சத்யமெங்குமே தளரா நாடு-இந்து தேசமதைப்புகழ்ந்துபாடு….” என்ற பாடலும் பிரபலமானவை.50

தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு.

தனிநபர் சத்தியாகிரகம்

அடக்குமுறை தீவிரமாகவே நாட்டில் இயக்கம் ஒருவாறு மந்தமடைந்தது. இதைப் பார்த்து தனிப்பட்ட சட்ட மறுப்புக்கு காந்தியடிகள் அனுமதி வழங்கினார். ஒவ்வொருவரும் கைதாகும் வரை சளைக்காது சேவைசெய்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் தனிப்பட்ட சட்டமறுப்பின் பெருமையை எடுத்துக் கூறினார். பின்னால் காந்தியடிகளும் சட்ட மறுப்பு செய்து தண்டிக்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் பல பெண்கள் பங்கு கொண்டு சிறை சென்றனர். 1940 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் ருக்மணி லட்சுமிபதி சத்தியாக்கிரகம் நடத்தியமையால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். மதுரையில் கே.பி.சானகிஅம்மாள் இரண்டாம் உலகப் போருக்கெதிராகப் பிரச்சாரம் செய்தபோது கைதானார். மேலும்; மதுரையைச் சேர்ந்த சொர்ணம்மாள் மற்றும் செல்லம்மாள் பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். அவர்களைப் பின்பற்றி மதுரையில் அகிலாண்டத்தம்மாள், லட்சுமிகாந்தன்பாரதி, திருமதி. சௌந்தரம் ராமசந்திரன், திருமதி. கிருஷ்ணசாமி, திருமதி. ராமசாமி ஆகியோர் சிறை சென்றனர்.

குமாரமங்கலத்து சமீந்தாரினி இராதாபாய் சுப்பராயன் உலகப்போருக்கெதிராக எட்டு பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்ட பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள் மற்றும் கரூரைச் சேர்ந்த பியாரி பீபி, ஆகியோர் இச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். சரஸ்வதி பாண்டுரங்கம் ஆறு மாத சிறைத்தண்டனை அடைந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவருடைய இரண்டு வயது மகளையும் ஆறு மாத மகனையும் இழந்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

சுதந்திரப் போராட்டத்தின் கடைசி அத்தியாயம் 1942 ஆம் ஆண்டில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டமாகும். இப்போராட்டத்தின் முக்கிய அம்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம். அந்தோணி அம்மாளும், பேச்சியம்மாளும் பங்கஜ மில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த குட்டியம்மாள் மற்றும் சோலையம்மாள் ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முனைந்தமையால் கைது செய்யப்பட்டு முறையே மூன்று மாதம், ஆறு மாதம் தண்டனை பெற்று கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டார்கள். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகளும் வகுப்பறைகளைப் புறக்கணித்து போராட்டத்திற்கு ஆரதவு தெரிவித்தனர்.

வெள்ளையரை எதிர்த்து மதுரையில் கண்டன ஊர்வலங்கள ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் வரை தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி தீச்சட்டி கோவிந்தன் மற்றும் பிற போலீசார் சொர்னம்மாள் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதுரையில் வாழ்ந்து வந்த லட்சுமி பாய் ஆகிய இருவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் கோவில் சாலையில் ஒரு காட்டில் இறக்கி அவ்விரு பெண்களின் ஆடைகளையும் பிடுங்கிக்கொண்டு அடித்து உதைத்தனர். இதுதான் சுதந்திரப்பாதை என்று கூறி ஒரு காட்டுப்பாதையில் அவர்களைத் தூக்கி வீசினர். இரவு முழக்க அங்கே மறைவிடத்தில் மறைந்திருந்துவிட்டு காலையில் அங்கிருந்த விவசாயிகள் உதவியால் ஆடைகள் பெற்று கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தனர்.அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இராணி மேரி கல்லூரி மற்றும கிறித்தவக் கல்லூரி மாணவியர் கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பேரணிகளும், மறியல் போராட்டங்களும் நடத்தினர். புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசியப்பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் இவ்வியக்கத்தின்போது தடை செய்யப்பட்டது. இவர் பின்வரும் பாடலான

  • அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க
  • அகிம்சைப்போர்தொடுத்தார் காந்திமகான்

என்றப் பாடலை உணர்ச்சியோடு பாடி ஹார்மோனியம் வாசித்தார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தன் ஒருவயது கை குழந்தையுடன ஆறுமாதம் சிறையிலிருந்தார்.

டி.கே.பட்டம்மாள் சிறுவயதிலேயே பாரதியின் பாடல்களைப் பாடி தேசப்பற்றினை வளர்த்தவர். காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்திருந்தபோது அவர் முன்னிலையில் "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ…. கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம்வாங்கினால் கை கொட்டி சிரியாரோ…..” எனும் பாடலைப்பாடி பாராட்டினைப் பெற்றவர்.60

பாடகியும், நடிகையுமான எம்.ஆர்.கமலவேணி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலும் பாடுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவம்

தமிழக மகளிர் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சென்று இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்ற வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற வீராங்கனை. இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். இந்திய சுதந்திரத்திற்காக தன் ராணுவத்திற்கு நிதி கொடுங்கள் என்று நேதாஜி கூறியதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு இவர் தான் போட்டிருந்த ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். மீண்டும் நேதாஜி பாரத நாட்டுக்காக ராணுவப் படையில் அணிதிரளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தவுடன் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு நன்கொடையாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மகளிருக்கென்று அமைந்த 'ஜான்ஸிராணி ரெஜிமெண்ட்'டில் சிப்பாயாகச் சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு ‘லாண்ட்ஸ் நாயக்’ என்று பதவி உயர்வு அளித்தார். 1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார்.61

லட்சுமிசுவாமிநாதன், ஆசாத் இந்து அமைச்சரவையில் சமூகப்பணி மற்றும் மருத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். மருத்துவப் பணியைத் துறந்துவிட்டு ஜான்சிராணி ரெஜிமென்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இவரை அழைத்தபோது எவ்விதத் தயக்கமும் காட்டாது மருத்துவப்பணியை துறந்துவிட்டு, அப்பொறுப்பை ஏற்று செயல்படத் தொடங்கினார். தமது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஆசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைச் சேர்த்து கொண்டார்.

ஜனவரி 1943 ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ராதாபாய் சுப்புராயன் தலைமையில் தேசிய கொடியை உயர்த்தி வந்தேமாதரம் பாடி சுதந்திர தினம் கொண்டாடினார்கள். ஆதனால் ராதாபாயும் அவருடன் இருந்த தமயந்தி எனற பெண்ணும் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையிலடைக்கப்பட்டனர். அம்முசுவாமி நாதனும், மஞ்சுபாசினியும் சென்னையில் ஊர்வலங்கள், கடையடைப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்த காரணமாக இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளிலிருந்து இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தங்களைப் போராட்டங்களில் அர்ப்பணித்த தமிழக மங்கையர்களின் வீரப் போரட்டம் நமக்குத் தெளிவாகிறது. சமூகக் கட்டுப்பாடுகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வீராவேசத்துடன் வெளிவந்து விடுதலைக்கு வித்திட்ட இவ்வீர மகளிர் வரலாறு தமிழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று.

ஜான்சி ராணி படை

ஜான்சி ராணி படை என்பது 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவாகும். இந்திய தேசிய ராணுவத்தின் ஆண்கள் படை போல் அல்லாமல் இந்த ஜான்சி ராணி படை முற்றிலும் வெளிநாட்டு இந்தியப் பெண்களை வைத்தே அமைக்கப்பட்டது. 20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்பது விதி என்றாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள பெண்களும் இப்படையில் உண்மையை மறைத்து இடம்பெற்றதாக கருதப்படுகிறது. இதில் உள்ள நிறைய பெண்கள் தன் தங்க நகைகளை படையின் பொருளாதாரத்துக்காக தானம் தந்தனர். ஜானகி ஆதி நாகப்பன் இப்படையின் துணைத்தளபதியாய் இருந்தார்.

குறிப்புகள்

  1. சோமலே, மதுரை மாவட்டம் (வேதாரண்யம், 1980), பக். 19-20
  2. ச.க.இராமர் இளங்கோ, பாரதிதாசன் படைப்புக்கலை (சிவகங்கை, 1983), பக்.306, 359
  3. செ.பழனிசாமி, புறநாநூற்றில் தமிழர் பண்பாடு, (கோவை, 1989), ப. 74
  4. இ.N.Pசநஅயடயவாயஇயேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.
  5. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், முதல் தொகுதி (சென்னை, 1983) ப.70.
  6. சு.யு.Pயனஅயயெடிhயnஇஏ.ழு.ஊhனையஅடியசயஅ Pடைடயiஇ(னுநடாiஇ1977)இp. 35
  7. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப. 162
  8. ம.பொ. சிவஞானம் விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, 1997), ப. 196
  9. இ ஊ.ஐ.னு சுநிழசவ இஏழட-5இ(ளநஉசநவ)இ 1908 – 9
  10. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப. 210
  11. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1997) பக். 90-91.
  12. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், பக். 219, 228
  13. மே.கூ ப. 233
  14. ந.முடிகோமதி, சட்டமன்றத்தில் அண்ணா (சென்னை, மணிவாசகர் பதிப்பகம், 1998), ப.207
  15. இருவார அறிக்கை, 17 ஆகஸ்ட் 1917 (குழசவniபாவடல சுநிழசவஇ புழஎநசழெச ழக ஆயனசயள வழ வாந புழஎநசழெச புநநெசயட ழக ஐனெயை) தமிழ்நாடு ஆவணக் காப்பகம், த.ஆ.கா)
  16. மே.கூ. 5 அக்டோபர் 1917
  17. தமிழரசு, மார்ச் 2006, பக். 68-69
  18. அ.இறையன், சுயமரியாதை சுடரொளிகள் (சென்னை, 1981), ப. 3
  19. சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர்:பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு, (சென்னை, 1997), ப.64
  20. மதுரை ஸ்ரீனிவாஸவரதன் வாக்குமூலம் அரசியல் பிரசித்தி பெற்றவர்கள் வாக்குமூலம், ப.2 (த.ஆ.கா) (Pநசளழயெட ளவயவநஅநவெ ழக Pழடவைiஉயட Pநசளழயெடவைநைள)
  21. மதுரை ஜில்லா தியாகிகள் மலர் (மதுரை சுதந்திர பிரசுராலயம, 1983) ப. 39.
  22. மே.கூ.பக். 32-33.
  23. அரசு ஆணை எண் 2852, பொதுப் பணித்துறை, 7 டிசம்பர் 1927, நவசக்தி, 7 செப்டம்பர், 1927
  24. நியூ இந்தியா, 7 நவம்பர் 1927
  25. இந்து, 2 பிப்ரவரி 1928
  26. இந்து, 20 அக்டோபர் 1927
  27. னுயஎனை யுசழெடனஇ யேவழையெடளைஅ யனெ சுநபழையெட Pழடவைiஉளஇ வுயஅடையெனரஇ ஐனெயைஇ (ளுரளளநஒ ருniஎநசளவைலஇ 1973), ப. 178.
  28. இருவார அறிக்கை, 3 பிப்ரவரி 1939.
  29. சட்டமறுப்பு இயக்கம் 1930-31 (இரகசியமானது) பக். 164-65 (ஊiஎடை னுளைழடிநனநைnஉந ஆழஎநஅநவெஇ உழகெனைநவெயைட)
  30. இளைஞர் இந்தியா, 22 மே 1930 (லுழரபெ ஐனெயை) உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
  31. இந்து, 4 ஜூன் 1931
  32. இளைஞர் இந்தியா, 22 மே 1930
  33. இருவார அறிக்கை, 4 ஜூன் 1930
  34. மே. கூ., 18 ஏப்ரல் 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ, 30 ஏப்ரல் 1930
  35. காங்கிரஸ், 22 ஏப்ரல் 1930: இந்து, 4 சூன் 1931
  36. இருவார அறிக்கை, 6 மே 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ, 30 ஏப்ரல் 1930
  37. இளைஞர் இந்தியா, 8 மே 1930; உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683வி, 20 மே 1930
  38. சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
  39. இருவார அறிக்கை, 4 சூன் 1930, சென்னை சட்டசபை விவாதம், நவம்பர் 1930-ஜனவரி 1931, பக். 147-49
  40. சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
  41. தளவாய், சுதந்திரப் போராட்டத் தியாகி சொற்பொழிவு, 14 ஆகஸ்ட் 1992, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்: தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991
  42. சட்டமறுப்பு இயக்கம் 1930-35, (இரகசிய செய்திகள் கோப்பு)
  43. உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
  44. நவசக்தி, 31 டிசம்பர் 1930
  45. சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
  46. மதுரை ஜில்லா தியாகிகள் மலர், ப.45
  47. இருவார அறிக்கை, 19 மார்ச் 1931
  48. மதுரை ஜில்லா தியாகிகள் மலர், ப.48
  49. ப.சோழநாடன், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் (சென்னை, ரிஷபம் பதிப்பகம், 2002), பக். 34-63
  50. தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991, பக். 22-23
  51. திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள், (சென்னை, 1981), பக். 156-159 ம. பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப.1 61
  52. சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப. 396, ஆகஸ்ட் 1932, ப. 43
  53. அரசு ஆணை எண் 507,பொதுத்துறை,15 சூன் 1933
  54. சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப.753
  55. சுதந்திரச் சங்கு, 3 ஏப்ரல் 1933
  56. P.N.Pசநஅயடயவாயஇ யேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.145
  57. பி.என்.பிரேமலதா, இந்தியப் பெண்கள் (கொடைக்கானல், 1997), ப. 192
  58. தினமலர், மதுரை, 26 பிப்ரவரி, 2004
  59. மே.கூ, 15 ஆகஸ்ட், 1999
  60. மே.கூ,
  61. ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.