1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு

1946 இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய ராச்சியத்தின் அரசு, அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. இது பிரித்தானிய அமைச்சர்களின் தூதுக்குழு (Cabinet Mission) என்றழைக்கப்பட்டது.

இக்குழு ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கிளமண்ட் அட்லியின் முயற்சியின் பலனாக உருவானது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் ஒப்படைக்கும் முறையினையும், சுதந்திரா இந்தியா எத்தகைய ஆட்சிமுறையைப் பின்பற்ற வேண்டுமென்று முடிவு செய்யவும் இக்குழுவை அட்லி உருவாக்கினார். முக்கிய இந்தியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு, அகில இந்திய முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த இக்குழு இந்தியா வந்தது. இதில் இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலர் பெத்விக் லாரன்சு பிரபு, வர்த்தக வாரியத்தின் தலைவர் சர் ஸ்டாஃபர்ட் கிரிப்ஸ், அடிமிரால்டியின் முதல் பிரபு (கடற்படை முதன்மைத் தளபதி) ஏ. வி. அலெக்சாந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். காங்கிரசு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தூதுக்குழு உறுப்பினர்கள் இரு வகைத் திட்டங்களை மே 1946 இலும் ஜூன் 1946 இலும் முன்வைத்தனர். இதன்படி இந்திய தேசியக் காங்கிரசு தலைமையில் ஒரு நடுவண் அரசு உருவானது. ஆனால் இத்திட்டங்களில் முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விடுதலை இந்தியா கருத்துரு அனைத்து இந்தியத் தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் பிரித்தானிய இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக 1947 இல் பிரிவினை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.