இந்திய அரசுச் சட்டம், 1909

இந்திய அரசுச் சட்டம், 1909 (Government of India Act 1909) அல்லது இந்திய கவுன்சில் சட்டம், 1909 (Indian Councils Act of 1909) என்பது 1909ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

வங்காளப் பிரிவினையால் இந்தியர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தவும், இந்திய புரட்சி இயக்கங்களின் ஆதரவைக் குறைக்கவும், இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டுமென்று காலனிய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைகளை இந்தியத் துறைச் செயலர் ஜான் மார்லே மற்றும் இந்திய வைசுராய் மிண்டோ பிரபு ஆகியோர் வழங்கினர். எனவே இவை “மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்” எனவும் வழங்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசின் இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்கும் கோரிக்கையை காலனியாளர்கள் ஏற்கவில்லை. மாறாக காலனிய நிருவாக முறையில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க சில வழிவகைகள் செய்யப்பட்டன. இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்திய கவுன்சில் சட்டம், 1909 இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • இந்திய சட்டமன்றங்களுக்குத் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அது வரை இந்திய உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
  • தேர்தல் முறையில் பெரும்பான்மை இந்துக்களுக்கு அதிக சாதகம் உள்ளது என்ற முசுலிம்களின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.
  • தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.