யு. என். தேபர்

உச்சரங்கராய் நவல்சங்கர் தேபர் அல்லது யு. என். தேபர் (Uchharangrai Navalshankar Dhebar - U. N. Dhebar) (1905–1977) இந்திய விடுதலை இயக்கப் போராளியாகவும், பின்னர் சௌராஷ்டிரா மாகாண முதல்வராக 1948 முதல் 1954 முடிய பதவியில் இருந்தவர்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்தியத் தலைவராக 1955 முதல் 1959 முடிய பதவி வகித்தவர்.[2] 1962இல் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக, ராஜ்கோட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

யு. என். தேபர், (வலதிலிருந்து நான்காவது), முன்னாள் முதல்வர், சௌராஷ்டிர மாகாணம், அமைச்சரவை உறுப்பினர்களுடன்

வாழ்க்கை

யு. என். தேபர் குசராத்து மாநிலத்தின் ஜாம்நகரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில், நவல்சங்கர் என்பருக்குப் பிறந்தவர்,[3] சட்டப் படிப்பு முடித்து, புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கிய தேபர், மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டதால், 1936இல் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு, இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1936இல் ராஜ்கோட் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கப் பேரரவையின் தலைவராகவும், கத்தியவார் அரசியல் மாநாட்டு அமைப்பின் செயலராகவும், ராஜ்கோட் மக்கள் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [3]

1941இல் உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், தேபர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து போராடியதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், சௌராட்டிராப் பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களை ஒன்றினைத்து சௌராஷ்டிர மாகாணத்தை நிறுவி, 1948 முதல் 1954 முடிய அதன் தலைமை அமைச்சரானார்.

1955 முதல் 1959 முடிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்தியத் தலைவராக செயல்பட்டார். 1960 – 1962 முடிய பட்டியல் சமூக-பட்டியல் பழங்குடியின ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டார்.[4] 1962இல் ராஜ்கோட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

பாராட்டுகளும் விருதுகளும்

இவரது சமூக, கல்வி முன்னேற்றம் தொடர்பான சிறந்த பணியைப் பாராட்டி, இந்திய அரசு 1973இல் பத்ம விபூசண் விருது வழங்கி பாராட்டியது. மேலும் ராஜ்கோட் விமான நிலையத்திற்கு யு. என். தேபரின் பெயர் சூட்டப்பட்டது.

மறைவு

1977இல் யு. என். தேபர் தமது 72ஆவது அகவையில் மறைந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.