ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்

ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் அல்லது ஆங்கில-மராட்டியப் போர்கள் (Anglo-Maratha Wars) என்பது 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற மூன்று போர்களைக் குறிக்கின்றது. [1]

இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு சிதைந்து, வடமேற்கு, மேற்கு மற்றும் நடு இந்தியாவின் பெரும் பகுதிகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கெயிக்வாட்கள் ஆண்ட பரோடா அரசு, ஓல்கர் வம்சம்|ஓல்கர்கள்]] ஆண்ட இந்தூர் அரசு, சிந்தியாக்கள் ஆண்ட குவாலியர் அரசு மற்றும் போன்சலேக்கள் ஆண்ட நாக்பூர் அரசு, கோல்ஹாப்பூர் அரசு, சாத்தாரா பகுதிகள் மற்றும் பேஷ்வாக்கள் ஆண்ட புனே பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடங்கிய சுதேச சமஸ்தான மன்னர்களாக, இந்திய விடுதலை வரை ஆண்டனர். [2]

முதல் போர் (1775–1782)

மராத்திய கூட்டமைப்பிற்கும், தலைமை அமைச்சர் & தலைமைப் படைத்தலைவர் பதவிக்கு ஆசைப்பட்ட இரகுநாத ராவுக்கும் இடையே பிணக்குகள் உண்டாயின. பிரித்தானியப் படைகள் இரகுநாதராவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். 1775 - 1782 முடிய நடைபெற்ற முதல் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்தியக் கூட்டமைப்பு தோல்வியுற்றது. மே, 1782ல் ஏற்பட்ட சல்பை உடன்படிக்கையின் படி, மராத்திய கூட்டமைப்பின் சால்சேட் தீவு கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டதுடன், இரகுநாதராவுக்கு பேஷ்வா பதவி வழங்கப்பட்டது.

இரண்டாம் போர் (1803–1805)

டிசம்பர், 1802ல் இந்தூர் மன்னர் பிரித்தானியர்களுடன் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டதால், மராத்திய சிந்தியாக்கள் மற்றும் போன்சலே வம்சத்தவர்கள் இவ்வுடன்படிக்கையை ஏற்கவில்லை. இதனால் 1803 - 1805ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், பிரித்தானியர்களின் ஆதரவு கொண்ட, ஹோல்கர் வம்ச இந்தூர் மன்னருக்கும், மராத்திய கூட்டமைப்பின் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவிற்கும் இடையே நடைபெற்றப் போரில், பேஷ்வா தோற்றார்.

இப்போரின் விளைவாக மராத்தியர்கள் மத்திய இந்தியா மற்றும் இராஜபுதனத்தின் பெரும் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் இழந்தனர்.

மூன்றாம் போர் (1817–18)

மராத்தியர்களுக்கும் - கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளுக்கும் 1817–1818ல் நடந்த போரில், மராத்தியக் கூட்டமைப்புகள் ஆங்கிலேயர்களிடம் தோற்றனர். போரின் விளைவாக மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. மேலும் கெயிக்வாட்கள் ஆண்ட பரோடா அரசு, ஓல்கர்கள் ஆண்ட இந்தூர் அரசு, சிந்தியாக்கள் ஆண்ட குவாலியர் அரசு மற்றும் போன்சலேக்கள் ஆண்ட நாக்பூர் அரசு, கோல்ஹாப்பூர் அரசு, சாத்தாரா பகுதிகள் மற்றும் பேஷ்வாக்கள் ஆண்ட புனே பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தி, சுதேச சமஸ்தான மன்னர்களாக இந்திய விடுதலை ஆகும் வரை ஆண்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Maratha Wars
  2. Maratha Wars



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.