வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
பிரித்தானிய இந்திய அரசு இந்தியர்கள் மீது விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து, மகாத்மா காந்தி தண்டியில் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்யக் கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 30 ஏப்ரல் 1930 அன்று வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது.

இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில், நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏ. என். சிவராமன், ஜி. ராமசந்திரன், துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் இராஜூ, ஜி. கே. சுந்தரம், ஓ. வி. அழகேசன், ரா. வெங்கட்ராமன், மட்டப்பாறை வெங்கட்ட ராமையா முதலிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சர்தார் வேதரத்தினம் பிள்ளை போராட்டக் குழுவினர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவினார்.[1] இப்போராட்டத்தின் விளைவாக சர்தார் வேதரத்தினம் பிள்ளை, இராஜாஜி உட்பட பலர் கைதாகி ஆறுமாத சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
நினைவுச் சின்னங்கள்
வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டிடம், வேதாரண்யம் மேலவீதியில் இராஜாஜி தலைமையில் போராட்ட குழுவினர் தங்கியிருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜாஜி நினைவுப் பூங்கா, இராஜாஜி சிறை வைக்கப்பட்டிருந்த உப்புத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள சிறை ஆகியவைகள் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களாக உள்ளது. இராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. [2]
இதனையும் காண்க
- சர்தார் வேதரத்தினம் பிள்ளை