ஆ. நா. சிவராமன்

ஆம்பூர் நாணுவையர் சிவராமன் என்ற ஏ. என். சிவராமன் (மார்ச் 1, 1904 - மார்ச் 1, 2001) தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். தினமணி பத்திரிகையின் ஆசிரியராக 54 ஆண்டுகள் பணியாற்றியவர்.

ஏ. என். சிவராமன்

வாழ்க்கைச் சுருக்கம்

சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூர் இவரது சொந்த ஊர். இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார். பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூரில் குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது, அப்போது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மகாத்மாவின் அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.

சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான டி. எஸ். சொக்கலிங்கத்தின் தலைமையில் 'காந்தி' பத்திரிகையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார். மீண்டும் சிறை சென்ற சிவராமன் இருபது மாதங்களில் விடுதலையானார். விடுதலையான சிவராமன் 'காந்தி ' பத்திரிக்கையில் மறுபடியும் பணியில் சேர்ந்தார்.

தினமணியில் ஆசிரியராக

1934 ஆம் ஆண்டு தினமணி இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, சொக்கலிங்கம் ஆசிரியராகவும் ஏ.என்.சிவராமன் உதவி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார்கள். 1944 இல் சொக்கலிங்கம் தினமணியை விட்டு வெளியேறியபோது, ஏ.என்.சிவராமன் தினமணியின் ஆசிரியராக ஆனார். அதன் பின்னர் தொடர்ந்து 44 ஆண்டுகள் 1987 வரை, தினமணி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

'கணக்கன்', 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', 'குமாஸ்தா', 'அரைகுறை வேதியன்', ‘அரைகுறை பாமரன்(அகுபா) போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.

தீவிர காங்கிரசுக்காரர், மேலும் காமராசரின் பற்றாளராகத் திகழ்ந்தார். இருந்தபோதும், 1967 தேர்தலை ஒட்டிய காலகட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக சிவராமன் எழுதிய கட்டுரைகள் ஆட்சி மாற்றத்திற்கு உதவியதாக அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார்.

மொழிகளைக் கற்பதிலும், புத்தக வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவராமன் தனது 93ஆவது வயதில் புதுக்கல்லூரி பேராசிரியர் உதவியுடன் அராபிய மொழியையும் கற்றிருக்கிறார்.

விருதுகள்

பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்து விடக்கூடாதென்பதற்காக நடுவண் அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகியவற்றை ஏற்க மறுத்து விட்டார். ஆனால், திருக்கோவிலூரில் 'கபிலர் விருதை'யும், பத்திரிக்கைப் பணியை பாராட்டி அளிக்கப்பட்ட பி.டி.கோயங்கோ (1988) விருதையும், அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற விருதையும் (நிறுவியவர் வா.செ.குழந்தைசாமி) ஏற்றுக் கொண்டார்.

இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் ஆக்கப் பணி விருதைப் பெற்றுள்ளார்.[1]

படைப்புகள்

  • சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம்
  • ரஷ்யப்புரட்சி 17 ஆண்டு அனுபவம்
  • இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி
  • அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்
  • சுதந்திரப் போராட்ட வரலாறு

மேற்கோள்கள்

  1. ஆ. நா. சிவராமன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.