மருது பாண்டியர்

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள பெரிய மருது, சிறிய மருது சிலைகள்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

வாழ்க்கைக் குறிப்பு

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.

இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.

சிவகங்கைச் சீமை மீட்பு

திருப்பத்தூரில் மருதிருவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண்

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

வழிபாட்டுத் தலங்களும் சமய ஒற்றுமையும்

மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.[1]

மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டி தேரும் செய்தளித்துள்ளனர். மருது பாண்டியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்திருக்கோயிலின் பெருமை பற்றிப் சிவகங்கைக் கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம் வானர வீர மதுரைப் புராணத்தை பாடியுள்ளார். இந்நூலின் இறுதி பாடல் மருது சகோதரர்களை “யதுகுல மருது பூபன் மைந்தர்கள் ” என்று குறிப்பிடுகிறது.[2][3]

இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்

1801 ஜுன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.[4]

மருது பாண்டியர் நினைவிடக் காட்சி

தூக்குத் தண்டனை

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.[1]

1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[5]

நினைவிடம்

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.[6]

நினைவுத் தபால் தலை

மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 79
  2. 'மருதுபாண்டிய மன்னர்கள் வரலாறு' - புலமை வேங்கடாச்சலம். பக்கம் 18, 19
  3. 'இந்துநன் னகரம் வாழி எந்தைசோ மேசன் வாழி வந்துஅளி முரல்பூங் கோதை ஆனந்த வல்லி வாழி ஐந்தரு அனைய வண்கை யதுகுல மருது பூபன் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் தம்மோடு வாழி வாழி!' - கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம். நூல்: வானர வீர மதுரைப் புராணம்.
  4. திருச்சி பிரகடனம்
  5. எஸ். ராமகிருஷ்ணன். எனது இந்தியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8476-482-6.
  6. மருதுபாண்டியர் நினைவிடம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.