ஜார்ஜ் ஜோசப்

ரோசாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப் (George Joseph, சியார்ச்சு சோசப்பு 5 சூன் 1887 – 5 மார்ச்சு 1938) கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர் ; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

ஜார்ஜ் ஜோசப்

இளமை

1887ம் ஆண்டு கேரளாவின் திருவாங்கூர் பகுதியின் செங்கானூரில் சிரியன் மரபுவழிக் கிறித்தவப் பிரிவில் (ஆர்த்தடாக்சு) பிறந்தவர் பின்னர் கத்தோலிக்க கிறித்தவ சபைக்கு மாறினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளத்திற்கு திரும்பியபோது ஆங்கிலேய அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில் தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி அந்தப் பதவிகளை ஏற்க மறுத்தார். அவரின் திருமணமும் ஆங்கில அரசில் உயர்பதவி வகித்த குடும்பத்தில் நடந்தேறியது. அப்போதும் அவர் ஆங்கிலேயர் தந்த பதவிகளை ஏற்க மறுத்தார்.

கிறித்தவராகப் பிறந்தாலும் காந்தியின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர்.[1] தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். பின்னர் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடலாம் எனத் தமிழகத்திற்கு வந்தவருக்குச் சென்னை போதிய ஒத்துழைப்பைத் தராத நிலையில் மதுரையில் தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கத் திட்டமிட்டு 1909 -இல் மதுரையில் குடியேறினார். மதுரையில் நடைபெற்ற பல வழக்குகளின் போது குறுக்கு விசாரணைகளில் சிறந்து விளங்கினார்.

வழக்குரைஞர் பணி

1918களில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரைக் குறிவைத்து ஆங்கிலேயர் குற்றப்பரம்பரைச் சட்டத்தைச் செயல்படுத்தி அம்மக்களை கொடுமைப் படுத்தி வந்தனர். வழக்கின் கொடுமைகளைச் சம்பந்தப்பட்டவர்களே சரிவர உணரமுடியாத காலத்தில் ஜார்ஜ் ஜோசப் எதிர்ப்பு தெரிவித்து பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டார். எப்போதும் தனது சட்டையில் ரோசாப்பூவை ஜார்ஜ் இடம்பெறச் செய்திருந்த நிலையில் கள்ளர் சமூக மக்கள் அவரை ரோசாப்பூதுரை என்று செல்லமாக அழைத்து வந்துள்ளனர்.[2] பின்னாளில் இவரைப் பார்த்தே ஜவஹர்லால் நேரு சட்டையில் ரோசாப்பூவைச் சேர்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது[3] தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். 1918ஆம் ஆண்டில் சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை கொண்டதால் மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன் பல வழக்கினையும் நடத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்கினை எதிர்த்து வாதாடி வெற்றிபெற்றார். அந்நாளில், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைக் காண அதிகளவில் தொழிலாளர்கள் கூடிய நிலையில் காவலர்கள் கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி 2 தொழிலாளர்களைத் துப்பாக்கி சூட்டின் மூலம் கொன்றனர்.[3]

விடுதலைப் போரில் பங்கு

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரைத் தலைமை ஏற்று நடத்து முன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாகச் சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்ற மூன்று பேர் உறுப்பினர்கள் சேலம் பி.வி.நரசிம்மையர், மாஞ்சேரி ராமையா, மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோராவர். இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டுக் கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது.[4] ஜார்ஜ் மதுரையிலிருந்து கொண்டே கேரளத்தில் நடைபெற்ற பல போராட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தினார். பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில் இந்திய விடுதலைப் போராட்டக்களத்திலும் இறங்கினார். பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோரின் ஹோம்ரூல் இயக்கத்தில் மாணவர்கள் சேரக் கூடாது என்று ஆங்கில அரசு சட்டம் இயற்றியபோது துணிச்சலுடன் அதை எதிர்த்துப் போராடினார். அப்போது தான் சுயநிர்ணயக் கொள்கையில் இந்தியாவின் கருத்தைத் தெரிவிக்கும் ஹோம்ரூல் இயக்கத்தின் குழுவில் இடம்பெறுமளவிற்கு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த இடத்திற்குச் சென்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்துகொண்டிருந்த தனது வழக்குரைஞர் தொழிலை உதறித் தள்ளினார்.

ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். கேரளம், தமிழ்நாடு என இருமாநிலங்களின் போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நிலையில் தான், காந்தியின் நட்பும், தோழமையும் ஜார்ஜ் ஜோசப்புக்குக் கிட்டியது.

1919 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ரௌலட் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தமிழில் வ. உ. சி யும், தெலுங்கில் ஹரிலோத்தமராவும் பேச, ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஜோசப் பேசினார். 1920 களில் கிலாபத் இயக்கத்தில் இந்தியா முழுதும் சிறுபான்மைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்து, மிகப்பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டினார்.

நேரு குடும்ப நட்பு

மோதிலால் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜார்ஜ்ஜோசப் மோதிலாலின் மூத்தமகள் விஜயலட்சுமி - சையத் உசேன் காதல் விவகாரத்தில் தலையிட்டுச் சமாதானப்படுத்தும் அளவுக்கு மோதிலாலின் குடும்பத்தினருடன் நல்ல உறவில் இருந்தார்.

இதழாசிரியர் பணி

ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து "தி இண்டிபென்டன்ட்" எனும் பெயரில் ஒரு இதழ் நடத்தினார். அதற்கு ஜார்ஜ் ஜோசப் சில காலம் ஆசிரியராக இருந்தார்.[5] அப்பொழுது அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவரிடம் மன்னிப்புக் கேட்குமாறு கூறப்பட்டது. தான் எழுதிய கட்டுரைக்காக மன்னிப்பு கேட்க மறுத்ததால் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு 18 மாதம் சிறை தண்டனையையும் அனுபவித்தார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்களில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார்.[5] அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர்.[4]

மேலும் தி சவுத் இந்தியன் மெயில், சத்தியார் கிரதி என்ற கையெழுத்து இதழ் , தேசபக்தன் போன்ற பல சுதந்திர போராட்ட கால இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்தார். சீரிய புரட்சிக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை.

காங்கிரசும் ஜோசப்பும்

எந்த ஒரு கருத்தினையும் துணிச்சலுடன் தெரிவிப்பவராக இருந்ததனால் பல நேரங்களிலும் எதிர்க் கருத்து கொண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளார். ஒரு முறை காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகியபோது காந்தி வருந்திக் கடிதம் எழுதியுள்ளார். ஜவஹர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு நிலை மற்றும் விதிகளை உருவாக்கிட அமைக்கப்பட்ட பல குழுக்களிலும் இடம்பெற்றார். 1929ல் மதுரை நகர சபைத் தேர்தலில் ஜார்ஜ் ஜோசப் போட்டியிட்டபோது உள்ளுர் காங்கிரசுக்காரர்களே இவரைத் தோற்கடித்த வரலாறும் உண்டு.

காந்தியும் ஜோசப்பும்

காந்தி அந்நியப் பொருட்களை வாங்கக் கூடாது என்றபோது அதில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்த ஜார்ஜ், கதர்த் துணி வாங்க அதிக செலவாகும், அதனால் உள்ளுர்த் தயாரிப்பான காக்கியை வாங்கலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி எப்போது மதுரை வந்தாலும் இவரது வீட்டிலேயே தங்கினார்.

காங்கிரசை விட்டு ஜோசப் விலகியிருந்த நிலையிலும் மதுரை வந்த காந்தி இவரது வீட்டில் தான் ஓய்வெடுத்தார். குறிப்பாகக் காந்தி அரை நிர்வாண ஆடைக்கு மாறியபோது அருகிலிருந்து ஏழை மக்களின் நிலையையும் இவரே எடுத்துரைத்தார்.

கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டபோது "நீங்கள் நிச்சயமாகச் சத்தியாகிரகத்தில் ஈடுபடக் கூடாது, இயக்கத்தை உருவாக்கக் கூடாது, பேனா மூலம் மட்டுமே அனுதாபத்தை வெளிக்காட்ட வேண்டும்" என்று ஜோசப்பிற்கு காந்தி கடிதம் எழுதினார். ஆனால் ஜார்ஜ்ஜோசப் "தீண்டாமை என்பது மதத்தின் உள்பிரச்சனை அல்ல, அரசியல் உரிமைக்கான மறுப்பு" என்று கூறி தொடர்ந்து போராடினார்.

1932 இல் யங் இந்தியாவில் காந்தி பின்வருமாறு எழுதுகிறார்..."கோயில் நுழைவு என்பது மத உரிமை ஆகையால் இதில் வேறு யாரும் (மற்ற மதக்காரர்கள்) நுழைவது சத்தியாகிரகம் என்று சொல்ல முடியாது. வைக்கம் சத்தியாகிரக காலத்தில், ஜார்ஜ் ஜோசப் சிறைக்கு சென்ற பொழுது, அவர் செய்தது தவறு என்று சொல்லியனுப்பினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு, உடனே மன்னிப்புக்கோரி, வெளியே வந்தார். கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது ஜாதி இந்துக்களுக்கு ஒரு தபசு போன்றது"

அதற்கு ஜார்ஜ் ஜோசப் பின்வருமாறு பதில் எழுதினார்,அவரின் பதில் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer என்ற பத்திரிகையில் பிரசுரம் ஆனது. "வைக்கம் சத்தியாகிரகத்திற்கும் கோயில் நுழைவிற்கும் சம்பந்தம் கிடையாது. பொதுப் பணத்தால் நிர்வகிக்கக்கூடிய ஒரு பொதுத்தெருவில் 'தீண்டத்தகாத' மக்கள் நடப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்பதே பிரச்சினை. அந்தத் தெரு கோயிலுக்கு அருகாமையில் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை, இதை திரும்பத் திரும்ப நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். நாங்கள் போராடியது குடியுரிமைக்கு மட்டுமே!போராட்டம் நீண்ட காலம் நடந்தது, இறுதி வெற்றி தீண்டத்தகாதவர்களுக்கு கிடைத்தது. நான் ஒரு கிறித்துவன் என்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று காந்தியார் சொன்னது உண்மை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லியனுப்பியதும் உண்மை, ஆனால் நான் மன்னிப்பு கேட்கவில்லை" எனத் தனது கருத்தை வெளியிட்டார்.[6]

சட்ட சபை உறுப்பினர்

1937ம் ஆண்டு ஜார்ஜ் ஜோசப் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் காப்பீட்டுச் சட்டம், முஸ்லீம் சரியத் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களின் மீது அதிகளவில் விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட இவரை அப்போதைய சென்னை மாகாணச சட்ட சபை உறுப்பினராகத் திருவரங்கம் தொகுதி (காங்கிரசு) சட்ட மன்ற உறுப்பினர்.கே.வி. ரங்கசாமி அய்யங்கார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதுடன் [3] ராஜாஜி, பெரியார், வ. உ. சிதம்பரம்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார், என். எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட 12 தமிழ்ப் பெரியார்களின் வரிசையில் ஜார்ஜ்ஜோசப்புக்கும் இடம் அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்[7]

இறுதிக் காலம்

பல்வேறு புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரரான விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப்பின், தியாகமும், வீரமும் மறைக்கப்பட்டது.[8] காங்கிரஸ் கட்சியினரே இவரது வளர்ச்சியையும், உண்மையையும் விரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தீவிர அரசியல் பணியில் இருந்து விலகிக் கிறித்தவத்தில் தனது கவனத்தைச் செலுத்திய நிலையில் இந்திய விடுதலையைக் காணாது 1938-ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார். மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோசாப்பூதுரைக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.

ஜார்ஜ் ஜோசப் பிறந்தநாள், நினைவுதினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழ்நாடு சிறுபான்மைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2018 ஜூன் 9-ஆம் தேதி மதுரைக்கு வந்திருந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் முன்னாள் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உசாத்துணை

மேற்கோள்கள்

<references>

  1. இரா. நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு / முதல் தொகுதி / பக்கம் 369 / 372
  2. தமிழ்நாட்டுத் தியாகிகள்
  3. மு.ஆனந்தகுமார்,வரலாற்றில் மறக்கப்பட்ட தேசியத் தலைவர் ரோசாப்பூ துரை,கீற்று வலைவாசல்,திங்கள், 08 மார்ச் 2010
  4. வெ. கோபாலன்,'தமிழ்நாட்டுத் தியாகிகள்'
  5. குடிஅரசு, 7-5-1931, பக்.10
  6. மாத்தியோசி சிந்தனைகள்-(காந்தியும் - நாராயண குருவும்)
  7. மு.ஆனந்தகுமார்,வரலாற்றில் மறக்கப்பட்ட தேசியத் தலைவர் ரோசாப்பூ துரை,கீற்று வலைவாசல்,திங்கள், 08 மார்ச் 2010
  8. George Joseph: The Life and Times of a Christian Nationalist, George Gheverghese Joseph, Orient Longman: Date:02/11/2003
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.