இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls' Day அல்லது The Commemoration of All the Faithful Departed) என்பது, சில கிறித்தவ சபைகள் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழா ஆகும். இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றன.

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்
ஓவியர்: வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ
பிற பெயர்(கள்)அனைத்து ஆன்மாக்கள் நாள், கல்லறைத் திருநாள்
கடைபிடிப்போர்மேற்கு மற்றும் கிழக்கு கிறித்தவம்
திருவழிபாட்டின் நிறம்ஊதா அல்லது கருப்பு
வகைகிறித்தவம்
அனுசரிப்புகள்கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் வேண்டல், தான தருமங்களை செய்தல்
நாள்மேற்கில் 2 நவம்பர்
கிழக்கில் வருடம் முழுது பல முறை
தொடர்புடையனபுனிதர் அனைவர் பெருவிழா

கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும்,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன.

தூய்மை பெறும் நிலை பற்றிய நம்பிக்கை

இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் "தூய்மை பெறும் நிலை" (purgatory) பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும்.

தூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது:[1]

தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்

இந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை "உத்தரிக்கிற ஸ்தலம்" அல்லது "உத்தரிப்பு ஸ்தலம்" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும்.

இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.

விழாக் கொண்டாடும் நாள்

கத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கூரப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.

கிழக்கு மரபுவழி திருச்சபை இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.

குறிப்புகள்

  1. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம், எண் 210
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.