அணிந்துரை

அணிந்துரை என்பது, ஒரு நூலை அல்லது வேறு இலக்கிய ஆக்கங்களை அறிமுகப்படுத்தி ஆக்குனர் அல்லாத இன்னொருவர் கொடுக்கும் அறிமுகம் ஆகும்.

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

அணிந்துரை கொடுப்பவர் குறித்த ஆக்கம் தொடர்பான துறையில் அறிவும் அனுபவமும் பெற்றவராயும், அத்துறை சார்ந்தோரிடையே மதிப்புப் பெற்றவராகவும் இருப்பது வழக்கம். பொதுவாக அணிந்துரை சுருக்கமாகவே இருக்கும். எனினும் சில வேளைகளில் அணிந்துரைகள் கட்டுரை நீளத்துக்கு நீண்டு விடுவதும் உண்டு. அணிந்துரைகள், பெரும்பாலும் அணிந்துரை எழுதுபவருக்கும் ஆக்குனருக்கும் இடையேயான தொடர்புகள், இத்தகைய நூலொன்றை எழுத்துவதற்கு அவருக்கு உள்ள தகைமைகள், நூல் தொடர்பில் ஆக்குனரின் முயற்சி, நூலின் முக்கியத்துவம், குறித்த துறைக்கு அதன் பங்களிப்பு போன்ற விடயங்களைத் தருவதுடன், அணிந்துரை கொடுப்பவர் சில சமயங்களில் நூலில் காணும் சிலவற்றைத் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் பார்த்து எழுதுவதும் உண்டு.

நன்னூல் காட்டும் அணிந்துரை

”கட்டட வேலைப்பாடுகளுடன் மாளிகை அமைந்திருந்தாலும் அதற்குப் பொலிவூட்ட அழகிய ஓவியங்கள் இன்றியமையாததனவாகும். ஒரு நகரம் மிகப்பெரியதாக விரிந்து பரந்து அமைந்திருந்தாலும் அந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தலைவாயில் அவசியமானது.இயற்கையிலேயே பெண்கள் அழகுடையவர்கள் என்றாலும் அவர்களுக்கு மேலும் எழிலூட்ட அணிகலன்கள் இன்றியமையாதது. அதுபோல ஒரு நூல் சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கோர் அணிந்துரை அவசியமானது” என்று அணிந்துரையின் இன்றியமையாமையை நன்னூல் விளக்கியுள்ளது.[1]


அடிக்குறிப்புகள்

மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்- நாடிமுன்
ஐதுரை நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது. - நன்னூல் (55) >


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.