உள்ளடக்க அட்டவணை

உள்ளடக்க அட்டவணை என்பது, ஒரு நூலின் அல்லது பிற ஆவணங்களின் பகுதிகளை அவை அந்த நூலில் அல்லது ஆவணத்தில் காணப்படும் ஒழுங்கில் காட்டும் ஒரு பட்டியல் ஆகும். இது சில வேளைகளில் வெறுமனே "உள்ளடக்கம்" என்றும் அழைக்கப்படுவது உண்டு. நூலின் உள் அமைப்பைப் பொறுத்தும், அதன் நீளத்தைப் பொறுத்தும் உள்ளடக்கம் பல மட்டங்களிலுள்ள தலைப்புக்களைப் பட்டியல் இடுவது உண்டு.

அத்தியாயங்கள் மட்டத்தில் மட்டும் பட்டியல் இடப்பட்டிருக்கும் உள்ளடக்கப் பக்கம் ஒன்று.

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

உள்ளடக்கம் நீளம் குறைவாக இருக்கவேண்டின் அத்தியாயங்களின் தலைப்புக்களை அதாவது முதல் மட்டத் தலைப்புக்களை மட்டும் பட்டியல் இடலாம். அத்தியாயம் ஒவ்வொன்றும் நீளமாக இருந்து அது பல பிரிவுகளைக் கொண்டிருப்பின் இந்த இரண்டாம் மட்டத் தலைப்புக்களையும் உள்ளடக்கத்தில் பட்டியல் இடுவது நூலில் என்னென்ன விடயங்கள் கையாளப்பட்டு உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும். பிரிவுகளுக்கும் பல துணைப் பிரிவுகள் இருந்து அவையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பின் அவற்றையும் பட்டியலில் சேர்த்துக்கொள்வது உண்டு. எனினும், உள்ளடக்கங்கள் நீளமாக இருப்பது வசதியாக இருக்காது. இதனால், பல அத்தியாயங்கள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் என்பவற்றைக் கொண்ட நூல்கள், ஆவணங்கள் முதலியவற்றில் உள்ளடக்கத்தின் நீளத்தைக் குறைப்பதற்காக, ஒரு மட்டத் தலைப்புக்களைப் பட்டியல் இடுவதோடு நிறுத்திக் கொள்வது உண்டு.

தகவல்களைத் தெரிந்து கொள்வதை இலகு ஆக்குவதற்காகச் சில எழுத்துமுறைக் கையேடுகள் உள்ளடக்கம் மூன்று பக்க நீளத்துக்குக் குறைவாக இருப்பது நல்லது எனப் பரிந்துரை செய்கின்றன.

அமைவிடம்

இரண்டு மட்டத் தலைப்புக்களைப் பட்டியலிடும் உள்ளடக்கம். ஒரு மட்டத்துக்கு மட்டுமே பக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நூல்களில், உள்ளடக்கம் பொதுவாக, குறைத் தலைப்புப் பக்கம், முன்படப்பக்கம், தலைப்புப் பக்கம், பதிப்பு அறிவிப்பு உரித்தாக்கம், அணிந்துரை, என்பவற்றுக்குப் பின்னர் வைக்கப்படுகின்றது. படிமங்கள், அட்டவணைகள் ஆகியவற்றின் பட்டியல்கள், முன்னுரை போன்றவை இதன் பின்னர் வைக்கப்படுகின்றன.

அமைப்பு

அச்சிடப்படும் நூல்களின் உள்ளடக்கத்தில் பட்டியல் இடப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எதிரில், அத் தலைப்புக்கள் தொடங்கும் பக்க எண்கள் குறிப்பிடப்படும். இணைய வழி நூல்களில், பக்கங்கள் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக அத்தலைப்புக்களில் இருந்து உரிய இடத்துக்கு இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.