நூல் அட்டை

நூல் அட்டை (Book cover) என்பது நூலின் பக்கங்களுக்குப் பாதுகாப்பாக முன்னும் பின்னும் வைத்துக் கட்டப்படும் அட்டைகள் ஆகும். முன்பக்கத்தில் வைத்துக் கட்டப்படும் அட்டை முன் அட்டை என்றும் பின்பக்கத்தில் வைத்துக் கட்டப்படுவது பின் அட்டை என்றும் குறிப்பிடப்படும். இவை பல வகையாக உள்ளன. தடித்த அட்டை, மெல்லிய அட்டை, என்பவற்றோடு, தூசியுறை, வளையக்கட்டு போன்றவை இவற்றுட் சில.

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

"கோடெக்சு ஆரெசு ஆஃப் லோர்ச்" என்னும் நூலின் யானைத் தந்தந்தால் செய்யப்பட்ட அட்டை. கிபி 810, கரோலிங்கிய வம்சம், விக்டோரியா மற்றும் அல்பர்ட் அருங்காட்சியகம்

வரலாறு

19 ஆம் நூற்றாண்டுக்கு முன், நூல்கள் மரப்பலகை, தோல், பொன் தகடு, வெள்ளித் தகடு போன்ற தடித்த பொருள்களைப் பயன்படுத்திக் கையால் கட்டப்பட்டன. பல நூறு ஆண்டுகளாக அட்டை கட்டுதல் தொழில், விலையுயர்ந்தனவும், கையால் எழுதப்பட்டனவுமான நூல்களின் பக்கங்களுக்குப் பாதுகாப்பு அழிக்கும் பயன்பாட்டுக்காகவும், அவற்றின் பண்பாட்டு ஆழுமைக்கு அழகூட்டல் மூலம் மதிப்பளிப்பதற்கு ஆகவும் செய்யப்பட்டு வந்தது. 1820களில், நூல்களுக்கு அட்டை கட்டுவதில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிப் படிப்படியாக பொறிகள் மூலம் அட்டை கட்டும் தொழில்நுட்பம் அறிமுகமானது. நீராவி ஆற்றலில் இயங்கும் அச்சியந்திரங்களின் பயன்பாடு நூல்களின் விலைகளைப் பெருமளவில் குறைத்தபோது, துணியும், பின்னர் கடதாசியும் அட்டை கட்டுவதற்கான முக்கியமான பொருட்கள் ஆயின. பொறிகள் மூலம் கடதாசி உற்பத்தி செய்யப்பட்டதும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது.

"இலசுட்ரேரெட் நோர்சுக் லிட்டெரேச்சர் இசுட்டோரி" (Illustreret norsk literaturhistorie) என்னும் 1896 ஆம் ஆண்டைச் சேர்ந்த நூலின் அட்டைகள்

மேற் கூறிய மாற்றங்கள், நூல் அட்டைகளை உற்பத்தி செய்வதை மலிவாக ஆக்கியது மட்டுமன்றி, அட்டைகள் மீது நிறங்களைப் பயன்படுத்திப் படங்களையும் எழுத்துக்களையும் அச்சிடுவதற்கும் வழிவகுத்தன. 19 ஆம் நூற்றாண்டின் சுவரொட்டிக் கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்கள் நூல் அட்டை கட்டுவதிலும் பயன்படலாயின. அட்டைகள், நூலுக்குப் பாதுகாப்பளிப்பதுடன் நில்லாது, நூலின் விளம்பரத்துக்கும், அந்நூலின் உள்ளடக்கம் சம்பந்தமான தகவல்களை உணர்த்துவதற்கும் பயன்படலாயிற்று.

அட்டை வடிவமைப்பு

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலை இயக்கங்களான "ஆர்ட்சு அண்ட் கிராஃப்ட்" (கலையும் கைப்பணியும்), "ஆர்ட் நொவ்வூ" போன்றவை நூல் அட்டை வடிவமைப்புக்கு உந்து சக்திகளாக அமைந்தன. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அட்டை வடிவமைப்புக் கலை வெகு விரைவிலேயே ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இருந்த முற்போக்கான நூல் பதிப்பாளரூடாக பெரும்படி நூல் உற்பத்தித் துறையிலும் நுழைந்து கொண்டது. அக்காலத்தின் தீவிர புதுமியத் (நவீன) தன்மை கொண்ட நூல் உறைகளில் சில 1920 களில் சோவியத் ஒன்றியத்தில் வடிவமைக்கப்பட்டன. "அவந்த் கார்டிய"க் கலைஞர்களான அலெக்சாண்டர் ரொட்சென்கோவும், எல் லிசிட்சுக்கியும் (El Lissitzky) இவ்வாறான அட்டைகளை வடிவமைத்த வடிவமைப்பாளர்களில் இருவர். ஆபிரே பியர்ட்சிலி (Aubrey Beardsley) என்பாரும் அக்கால நூல் அட்டை வடிவமைப்புத்துறையில் செல்வாக்குச் செலுத்தியவர் ஆவார். இவர் 1894-95 காலப்பகுதியில் இலண்டனில் இருந்து வெளியான "யெலோ நூல்" (Yellow Book) எனப்படும் இலக்கிய சஞ்சிகையின் முதல் நான்கு இதழ்களுக்கு அட்டை வடிவமைத்தார்.

போருக்குப் பிந்திய காலங்களில் நூல் உற்பத்தித் துறையில் வணிகப் போட்டிகள் கூடுதலானதால் அட்டை வடிவமைப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியது. அக்காலத்து நூல்களின் உள்ளடக்கம், அதன் பாணி, அதன் வகை, என்பன குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள அவற்றின் அட்டைகள் உதவின. இணைய வழி விற்பனை சிறப்புப் பெற்றுள்ள தற்காலத்திலும் நூல் அட்டைகளில் முக்கியத்துவம் குறைவடையவில்லை. நூல் அட்டைகளின் "எண்ணிய" வடிவங்கள் நூல் விளம்பரத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.