பதிப்பு அறிவித்தல்

ஒரு நூல் தொடர்பில் பதிப்பு அறிவித்தல் என்பது அந்த நூலின் பதிப்புக் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பக்கத்தைக் குறிக்கும். இது காப்புரிமைப் பக்கம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது பெரும்பாலும் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்தில் காணப்படும். இப் பக்கத்தில், காப்புரிமை அறிவிப்பு, பிற சட்டம்சார் அறிவிப்புகள், பதிப்பாளர் தகவல்கள், நூலின் பதிப்பு வரலாறு, நூலக காங்கிரசு விபரப்பட்டியல் தகவல்கள், அனைத்துலகத் தரப்பாட்டு நூல் எண் (ஐ.எசு.பி.என்) என்பன தரப்பட்டிருக்கும். இப்பக்கத்தில் காணப்படும் தகவல்கள் அந் நூலைக் குறிப்பாக அடையாளம் காண உதவுகின்றன.

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

கூறுகள்

காப்புரிமை அறிவிப்பு

இப்பக்கத்தில் காணப்படும் காப்புரிமை அறிவிப்பில் பொதுவாக மூன்று பகுதிகள் காணப்படும். இவை காப்புரிமை தொடர்பான மூன்று விடயங்களைக் கூறுகின்றன. இவை:

  1. காப்புரிமை அடையாளம் ©
  2. நூல் பதிப்பித்த ஆண்டு
  3. காப்புரிமை கொண்டவரின் பெயர்.

பதிப்பாளர் விபரம்

இதன் கீழ் பதிப்பாளருடைய பெயர், அஞ்சல் முகவரி, இணையதள முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்புக்குரிய தகவல்கள் தரப்படும்.

பதிப்பு வரலாறு

இப் பகுதியில், நூலின் முதற்பதிப்புக் குறித்த தகவல்கள், தற்போதைய பதிப்புக் குறித்த தகவல்கள், பதிப்பு மீள் பதிப்பா அல்லது திருத்திய பதிப்பா என்பது போன்ற தகவல்கள் காணப்படும்.

நூலக காங்கிரசு பதிப்பின்போது பட்டியலிடல் (சி.ஐ.பி) தரவுகள்

இது, வெளிவரவிருக்கும் நூல்கள் தொடர்பிலான விபரப்பட்டியல் பதிவுகள் ஆகும். இத்தரவுகள், நூலகங்கள் தமக்கு வேண்டிய நூல்களை வாங்குவதற்கும், அவற்றைப் பட்டியலிடுவதற்கும் உதவுகின்றன.

அனைத்துலகத் தரப்பாட்டு நூல் எண் (ஐ.எசு.பி.என்)

இது நூலுக்குரிய அடையாள எண் ஆகும். பொதுவாக எல்லா நூல் தொடர்பான தரவுத் தளங்களும் நூல்களைத் தேடுவதற்கு இந்த எண்ணைப் பயன்படுத்துகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.