தாதுசேனன்

தாதுசேனன் (பொ.பி. 463 - 479) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தை சேர்ந்த முதல் மன்னனாவான். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த பாண்டியர் வேந்தர்கள் சிலர் இராசராட்டிரப் பாண்டியர் என்னும் ஆட்சியை தொடங்கி வைத்தனர். அக்காலத்தில் தாதுசேனன் அநுராதபுரம் மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இருந்தான். இவனுக்கு நாடாலும் ஆசையிருக்கிறதை அறிந்த இவனுடைய தாய்மாமன் இவனுக்கு மத நூல்களை போதிக்காமல் அரசியல் நூல்களை போதித்தான். தனக்கெதிரான தாதுசேனன் பௌத்தப் பள்ளியில் இருப்பதை அறிந்த முதலாம் இராசரட்டிரப் பாண்டியன் பாண்டு இவனை கைது செய்வதற்கு முயற்சித்தான். இதை அறிந்த தாதுசேனனும் அவன் மாமனும் மகாவலி கங்கை தாண்டிச் சென்று உருகுணை காட்டுப்பகுதிக்குச் சென்றனர். அக்காலத்தில் உருகுணை கலகக்காரர்களுக்குப் புகலிடமாக விளங்கியது. அங்கிருந்து இராசராட்டிரப் பாண்டியர்கள் மீது படையெடுக்க தக்க சமயம் பார்த்திருந்தனர் தாதுசேனனைச் சேர்ந்தவர்கள். ஆறு இராசராட்டிரப் பாண்டியர் மன்னர் ஆட்சியிலும் இராசராட்டிரம் மீது படையெடுத்தான். அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் திரிதரன் மற்றும் தாட்டியன் போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான பிட்டியன் ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான் தாதுசேனன். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இவனது வழிவந்தோரே அதன் பிறகு இலங்கையை சில நூற்றாண்டுகள் அரசாண்டனர்.

உள்நாட்டுப்பகை

இவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் அரசகுல மனைவிக்கு முதலாம் முகலன் (பொ.பி. 497 -515) என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். மற்றொரு மனைவிக்கு முதலாம் காசியப்பன் என்ற மகனுண்டு. தாதுசேனனின் தங்கை மகனுக்கு தன் முதல் மனைவியின் பெண்ணை மனமுடித்து அவனையே அமைச்சனாகவும் வைத்துக் கொண்டான். தன் பெண்ணை அமைச்சன் கொடுமைப்படுத்துகிறான் என்பதை அறிந்த தாதுசேனன் தன் தங்கையும் அமைச்சனின் தாயுமானவளை கொன்றுவிட்டான். அதனால் கோபமடைந்த அமைச்சன் காசியப்பனிடம் சென்று அவனுக்கு அரசாளும் ஆசையை ஊட்டிவிட்டு அவனின் தந்தையான தாதுசேனனையே கைது செய்யுமாறு செய்துவிட்டான். அதனால் பட்டத்துக்கு உரியவனான முகலன் தமிழகத்திற்கு தப்பிவிட்டான். அமைச்சன் அதனோடு நில்லாமல் காசியபனிடம் மீண்டும் சென்று உன் தந்தையான் தாதுசேனன் இலங்கையின் செல்வங்களை மொக்கல்லானனுக்காக ஒளித்து வைத்திருப்பதாக கூறியவுடன் தாதுசேனனையே காசியபன் கொன்றுவிட்டான். அதன் பிறகு காசியபன் (பொ.பி. 479 - 497] இலங்கையை அரசாண்டான்.

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மூலநூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.