மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி[1] (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:

தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”

2000 ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.

படைப்புகள்

  • கிறித்துவமும் தமிழும்
  • பௌத்தமும் தமிழும்
  • சமணமும் தமிழும்
  • மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
  • இறையனார் களவியல் (ஆராய்ச்சி)
  • பௌத்தக் கதைகள்
  • இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்
  • மகேந்திரவர்மன்
  • நரசிம்மவர்மன்
  • மூன்றாம் நந்திவர்மன்
  • புத்த ஜாதகக் கதைகள்
  • அஞ்சிறைத்தும்பி
  • கௌதம புத்தர்
  • மறைந்து போன தமிழ் நூல்கள்
  • சாசனச் செய்யும் மஞ்சரி
  • மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்
  • பழங்காலத் தமிழ் வாணிகம்
  • கொங்கு நாட்டு வரலாறு
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • இசைவாணர் கதைகள்
  • உணவு நூல்
  • துளுவ நாட்டு வரலாறு
  • சமயங்கள் வளர்த்த தமிழ்
  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
  • சேரன் செங்குட்டுவன்
  • 19ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
  • சங்க காலச் சேர சோழ பாண்டியர்
  • சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
  • நுண் கலைகள்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • சிறுபாணன் சென்ற பெருவழி
  • மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழி பெயர்ப்பு)
  • பழந்தமிழும் பல்வகைச் சமயமும்

குறிப்புகள்

  1. இவரது பெயர் சில தரவுகளில் மயிலை சீனி. வெங்கடசாமி என்றும் எழுத்துக்கூட்டப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.