இந்திய அரசுச் சட்டம், 1919

இந்திய அரசுச் சட்டம், 1919 (Government of India Act 1919) என்பது 1919ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

முதலாம் உலகப் போரில் இந்தியாவின் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் இந்தியத் துறைச் செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்சுஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]

இந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேந்திய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக்கப் பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (princely states, சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடுமென்றும் தீர்மானிக்கபப்ட்டது. இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920ல் முதல்த் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

இச்சட்டம் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. S. Krishnaswamy (1989). The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947. People's Pub. House (New Delhi). பக். 72–83.
  2. "The State Legislature - Origin and Evolution". தமிழ்நாடு Government. பார்த்த நாள் 17 December 2009.
  3. "Tamil Nadu Legislative Assembly". Government of India. பார்த்த நாள் 17 December 2009.
  4. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. பக். 206. http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.