மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (Montagu–Chelmsford Reforms), 1919ல் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரித்தானிய இந்திய அரசின் செயலளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து, பிரித்தானிய இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்க, 1919ல் ஒரு அறிக்கையை தயாரித்து பிரித்தானியப் பேரரசுக்கு அனுப்பினர்.
இதனடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது.
சீர்திருத்தங்கள்

பிரித்தானிய இந்திய அரசின் தலைமைச் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகு, இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட அரசியல் சுயாட்சி வழங்குவதற்கு வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபு மற்றும் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கலந்து பேசினார்.
பின்னர் புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹேலி-ஹட்சின்சன், வில்லியம் டியூக் மற்றும் சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எனும் பெயரில் அறிக்கை 1917ம் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டது. [1]
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை[2], ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்கும் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி 1921ல் சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. [3]
பின்னர் 1932ல் மத்தியப் பிரதேசம், பிகார், ஒரிசா மற்றும் அசாம் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டது. [4]
மேலும் பிரித்தானிய இந்தியாவின் மத்திய அரசு மற்றும் இந்திய மாகாண அரசுகளின் அதிகாரங்கள்,கடமைகள், பொறுப்புகள் வரையறுக்க்கப்பட்டது. இதன் படி, பிரித்தானிய இந்தியாவின் மைய அரசிற்கு இராணுவம், வெளியுறவுத் துறை, தொலைதொடர்புத் துறை, அஞ்சல் துறை, வெளிநாட்டு வாணிகம், இரயில்வே முதலிய முக்கியத் துறைகளும்; இந்திய மாகாண அரசுகளுக்கு மருத்துவம், சுகாதாரம், கல்வி, பொதுத்துறை, நீர்பாசானம், காவல் துறை, சிறைத்துறை, நீதித்துறை, உள்ளாட்சித் துறை முதலிய துறைகள் ஒதுக்கப்பட்டது. மாகாண அரசுக்கு ஒதுக்கப்படாத துறைகளை மைய அரசே கவணிக்கும்.
மாகாண அரசுகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாகாண ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். இல்லை எனில் மாகாண அரசுகள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு வராது.
1920ல் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள உள்ளூர் இந்திய மக்களின் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் நகராட்சி, மாநகராட்சி மன்றங்கள் அமைக்க மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு அறிக்கையாக தயாரித்தது பிரித்தானிய அரசுக்கு பரிந்துரைத்து. 1921ல் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் இதர சீர்திருத்தங்கள்
- பிரித்தானிய இந்திய அரசின் நிர்வாகத்தை இந்தியச் செயளர் நடத்த வேண்டும்.
- இந்திய நாடாளுமன்றம் மேலவை மற்றும் கீழளவை என இரண்டு அவைகள் கொண்டிருக்க வேண்டும்.
- இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும்.
- இந்தியத் தலைமை ஆளுநருக்கு மாகாண சட்டமன்றங்களை கலைக்கும் அதிகாரம் மற்றும் மாகாணங்களில் அவரசர நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம்.
- இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாக இருக்க வேண்டும்.
- மாகாண சட்டமன்றங்கள் மேலளவை மற்றும் கீழளவை என இரண்டு அவைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் எதிர்ப்பு
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் இந்தியாவில் பிரித்தானிய அரசிற்கெதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. மகாத்மா காந்தி பிரித்தானிய அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் எனும் போராட்டத்தை துவக்கினார். பிரித்தானிய அரசின் எதிர்ப்பாளர்களை அடக்க ரௌலட் சட்டத்தின் படி, விசாரணை இன்றி சிறையில் அடைத்தனர்.
ரௌலட் சட்டத்திற்கு எதிராக, ஏப்ரல், 1919ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் மீது முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரித்தானியா இராணுவத்தினர் சுட்டதில் 376 பேர் படுகொலை செய்யப்பட்டனர். [5] ஜாலியன்வாலா பாக் படுகொலை காரணான ரெசினால்டு டையர் மீது ஹண்டர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
ஜாலியன்வாலா பாக் படுகொலையால், இந்தியா முழுவதும் பிரித்தானிய அரசிற்கெதிரான போரட்டங்கள் வலுப்பெற்றது. 1920ல் இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில் முழுமையான சுயாட்சி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
சீராய்வு
சைமன் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய சைமன் குழு அமைக்கப்பட்டது. இந்தியர்களின் முழு சுயாட்சி கோரிக்கைக் குறித்து பரிசீலனை செய்ய லண்டனில் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றது. மகாத்மா காந்தி 1931ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்.
வட்ட மேஜை மாநாட்டின் முடிவுகளின் படி, இந்திய அரசுச் சட்டம், 1935 நிறைவேற்றப்பட்டது. இதன் படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- Dixon, William Macneile. "Summary of Constitutional Reforms for India : being proposals of Secretary of State Montagu and the Viceroy, Lord Chelmsford". New York: G. G. Woodwark. பார்த்த நாள் 21 March 2016.
- Britannica Encyclopaedia: Montagu-Chelmsford Report
- Shane Ryland (2011). Edwin Montagu in India, 19174918: Politics of the Montagu‐Chelmsford report. South Asia: Journal of Asian Studies. pp. 79-92. Online.
- Philip Woods (1994). The Montagu-Chelmsford reforms (1919): A re-assessment. South Asia: Journal of Asian Studies. pp. 25-42. Online.
- Nigel Collett (15 October 2006). The Butcher of Amritsar: General Reginald Dyer. A&C Black. p. 263.
வெளி இணைப்புகள்
- Montagu Millennium entry on Montagu-Chelmsford Report
- One Scholar’s Bibliography
- Puja Mondal, Montagu-Chelmsford Reforms and the Government of India Act, 1919.
- Self study history: Montagu-Chelmsford Reforms
- Paul Johnson (1991). A History of the Modern World: from 1917 to the 1990s. Weidenfeld and Nicolson London.
- Merriam-Webster's Biographical Dictionary entry on Edwin Montagu (1995). Merriam-Webster