திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1]


காளமேகப் பெருமாள் கோயில்

பிறபெயர்கள்: திருமோகூர்
மூலவர்: காளமேகப் பெருமாள்
தாயார்: மோஹனவல்லித் தாயார்
உத்சவர்: திருமோகூர் ஆப்தன்
உத்சவ தாயார்: மோகனவல்லித் தாயார்
புஷ்கரணி: சீராப்தி புஷ்கரணி
விமானம்: சதுர்முக விமானம்
அமைவிடம்: மதுரை
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

கோயில் கலைச் சிறப்புகள்

இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.

சங்ககாலத்தில் மோகூர்

சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன். இவன் தம்பி இளம் பழையன் மாறன். செங்குட்டுவன் இவனைப் போரில் வீழ்த்தி, இவனது காவல்மரம் வேம்பை வெட்டித் தன் தலைநகர் வஞ்சிக்குக் கொண்டுசென்று, தனக்கு முரசு செய்துகொண்டான். நான்மொழிக் கோசர் இவ்வூரில் வரி தண்டினர். மோகூர் வரி தர மறுத்ததால், கோசருக்கு உதவும் பொருட்டு மோரியர் படையெடுத்து வந்தனர்.

நம்மாழ்வார் பாசுரம்

நம்மாழ்வார் இவ்வூர் கோயில்மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.[2]
தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்ற சுரனைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே.[3][4]

போக்குவரத்து

இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.

அடிக்குறிப்பு

  1. திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
  2. பாடல் 3074 முதல் 3084, 11 ஆம் பாடல் பயன் கூறும் பாடல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம் டிரஸ்ட் வெளியீடு, 2009
  3. பாசுரம் 3074
  4. பிற பாடல்கள்

புற இணைப்புகள்

இதனையும் காண்க

படத்தொகுப்பு


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.