திங்களூர் கைலாசநாதர் கோயில்

நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]

தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற
திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திங்களூர்
பெயர்:திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திங்களூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கயிலாசநாதர்
தாயார்:பெரிய நாயகி
தீர்த்தம்:சந்திர புஷ்கரிணி
பாடல்
பாடல் வகை:தேவார வைப்புத்தலம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

தல வரலாறு

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.

அப்பூதி அடிகள்

இத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம்.அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது.

திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும், என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் "திருப்பதிகம்" என்றழைக்கப் படுகின்றன.

விவரம்

புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

  • இறைவன்: கைலாசநாதர்
  • இறைவி : பெரியநாயகி
  • சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.
  • சந்திரனின் நிறம் : வெண்மை
  • வச்திரம்: வெள்ளைத்துணி
  • தான்யம்; நெல்
  • உணவு: தயிர் சாதம்
  • மலர்: வெள்ளை அரளி

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 288
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.