வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.[1].

வாஞ்சிநாதன்
பிறப்புசெங்கோட்டை
இறப்பு17 சூன் 1911
பணிRevolutionary

வாழ்க்கைச் சுருக்கம்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் [2] பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.

வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு.ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.

நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி'எஸ்கோர் ஆஷ். ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் [3].

ஆஷ் துரை கொலை

1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[4]

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.

கௌரவிப்பு

வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு பெயர்ப்பலகை

மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிட பாராளுமன்றத்தில் குமரி அனந்தன் வலியுறுத்தினார்.[5] முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.[6]

விமர்சனங்கள்

வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொலை செய்த இடத்தில் விட்டுச் சென்ற கடிதத்தில் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கொண்டு அவர் சாதி, சனாதன உணர்வுகளைக் கொண்டிருந்தார் என்றும் விமர்சனம் செய்யப்படுகிறது. அவர் பஞ்சமன் என்று எழுதவில்லை, ஐந்தாம் ஜார்ஜ் என்பதை ”பஞ்சயன்” என்றே எழுதினார் என்று இந்த விமர்சனத்தை மறுப்போரும் உளர்.[7]

மேற்கோள்கள்

  1. 30-08-2013 வெளிவந்த தினத்தந்தி சிறுவர் தங்கமலர் வார இதழ்.
  2. உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? - ஆதாரங்களை ஆவணப்படுத்த கோரிக்கை தி இந்து தமிழ் ஜூன் 17 2015
  3. http://www.vikatan.com/news/coverstory/29084.html மர்மம் கலையாத ஆஷ்துரை மரணமும், வாஞ்சியின் உயிர்தியாகமும்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு
  4. உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? - ஆதாரங்களை ஆவணப்படுத்த கோரிக்கை தி இந்து தமிழ் ஜீன் 17 2015
  5. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்
  6. http://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-opens-vanchinathan-memorial-in-shencottah/article5494457.ece
  7. “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர் R. Vandhi Aiyar of Shencotta, http://www.keetru.com/dalithmurasu/nov08/sivasubramanian.php

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.