இரங்கநாதன் தெரு

இரங்கநாதன் தெரு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தெருவாகும். இது மாம்பலம் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பல்வேறு வகையான வணிகம் நாள்தோறும் இத்தெருவில் நடக்கின்றது.[1]

மக்கள் கூட்டம் மிகுந்த இரங்கநாதன் தெரு

வரலாறு

இரங்கநாதன் தெரு என்று வழங்கப்படும், இத்தெருவின் முழுப்பெயர், இரங்கசுவாமி ஐயங்கார் தெரு என்பதாகும். இத்தெருவில் முதலில் குடியேறியவரின் பெயர் இத்தெருவுக்கு வைக்கப்பட்டது. பெரும்பாலும், சாதி, மத பேதமின்றி அக்காலத்தில் எவர் அத்தெருவில் முதலில் குடியேறுகிறாரோ அவர் பெயரே வழங்கப்பட்டு வந்தது.

1920-களில் சென்னை மாகாணத்தின் ஓய்வு பெற்ற பணியாளான, துபில் இரங்கசுவாமி ஐயங்கார் தன்னுடைய வீட்டை இப்பகுதியில் நிறுவினார். குடியுரிமை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இதனை இரங்கநாதன் என்று கடவுள் பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்தியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் வணிகத் தெருக்களில் இதுவும் ஒன்றாகும்.

பொதுவானவை

இத்தெருவின் ஒரு முற்றத்தில் உஸ்மான் சாலை உள்ளது. மற்றொரு முற்றத்தில் மாம்பலம் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இத்தெருவில், குண்டூசி முதல் தங்கம், வைரம் வரை அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். பல காய்கறி அங்காடிகளும் இரங்கநாதன் தெருவில் உள்ளன.

இஃது ஆண்டு முழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் ஒரு பகுதியாகும். தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களில் அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்குமென்பதால் மிகவும் அதிகமான கூட்டமாக மக்கள் வருவது வாடிக்கையாகவே உள்ளது.

வணிக வளாகங்கள்

பல்வேறு துணிக் கடைகளும், நகைக்கடைகளும் இப்பகுதியில் தங்களுடைய ஒரு கிளையையாவது இங்கே வைத்துள்ளனர்.

தியாகராய நகரின் அடையாளச் சின்னமாக இத்தெரு விளங்குகிறது. அருகே தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளதால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பொருட்கள் வாங்குவருவோருக்கும் போக்குவரத்து வசதி மிகவும் எளிதாக உள்ளது.

இத்தெருவில் வசிக்குமிடங்கள் இல்லாவிட்டாலும், சற்று தொலைவில் சிறு சிறு பகுதிகள் தங்குவதற்கு ஏதுவாகவே உள்ளன.

திரைப்படங்களில்

இத்தெருவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, வெளிவந்த திரைப்படமே, அங்காடித் தெரு ஆகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.