மியூசிக் அகாதெமி (சென்னை)

'மியூசிக் அகாதெமி' என்றழைக்கப்படும் கலை மன்றம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இராயப்பேட்டை பகுதியில் உள்ளது . இக்கலை மன்றம், சங்கீத வித்வத் சபை என்றும் அழைக்கப்படுகிறது.

தோற்றம்

கருநாடக இசையின் நலம் விரும்பிகள் மற்றும் இசை விரும்பிகள், அப்போதைய மெட்ராஸ் நகரத்தில் ஒரு கலை மன்றத்தை நிறுவ விரும்பினர். அகில இந்திய இசை மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இசையை வளர்க்கும் முகமாகவும், இசையைப் பற்றி தத்துவம் மற்றும் பயிற்சி ரீதியாக கற்றுத்தரும் வகையிலும் இக்கலை மன்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட வரவேற்பு குழு, 1928 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தற்காலிகமானதொரு செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. கலை மன்றத்தை நிறுவும் பொறுப்பு அச்செயற்குழுவிடம் தரப்பட்டது.

1928 ஆம் ஆண்டில், இக்கலை மன்றத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனையை தரும் வகையில் 'வல்லுநர் குழு' ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. சர்வஸ்ரீ பிதராம் கிருஷ்ணப்பா
  2. அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
  3. பல்லடம் சஞ்சீவ ராவ்
  4. தட்சிணாமூர்த்தி பிள்ளை
  5. புரபசர் வெங்கடசாமி நாயுடு
  6. ஜலதரங்கம் ராமனைய்யா செட்டி
  7. செய்தூர் ஜமீந்தார்
  8. எம். எஸ். ராமசுவாமி ஐயர்
  9. டபிள்யூ. துரைசுவாமி அய்யங்கார்
  10. ராவ் பகதூர் சி. ராமாநுஜச்சாரியார்
  11. டி. எல். வெங்கடராம ஐயர்
  12. டி. வீ. சுப்ப ராவ்

1928 ஆம் ஆண்டு; ஆகஸ்ட் 18 அன்று இக்கலை மன்றம், பொது நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  1. ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அல்லது வேறேதேனும் காலகட்டத்தில் இசை மாநாட்டினை நடத்துதல்.
  2. இசை குறித்த தகவல்களை சேகரித்து பராமரிப்பதோடு, அவைகளை தொகுப்பு நூல்களாக வெளியிடுதல்.
  3. ஒரு நூலகத்தையும், அருங்காட்சியகம் ஒன்றையும் நிறுவி பராமரித்தல்.
  4. தகுதியான இசைக் கலைஞர்களையும், இசைத்துறை கல்விமான்களையும் ஊக்கிவித்து அவர்களை பொதுமக்களின் கவனத்திற்கு கொணர்தல்.
  5. தேர்வுகள், போட்டிகளை நடத்துதல் மற்றும் அவைகளை நடத்த உதவுதல்.

இதனையும் காண்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையத்தளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.