நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, அலுவல்முறையாக உத்தமர் காந்தி சாலை அல்லது எம்ஜி சாலை, சென்னையின் மையப்பகுதியில் எழும்பூர் - நுங்கம்பாக்கம் கோட்டத்தில் அமைந்துள்ள முதன்மைச் சாலையாகும். இது மிகவும் வணிகமயமான மற்றும் நெருக்கடிமிக்கச் சாலையாகும்.

வரலாறு

19ஆவது நூற்றாண்டிற்கு முன்னதாக நுங்கம்பாக்கம் சிற்றூர் வேளாண்நிலமாக இருந்தது. 1798இல் மன்றோ பாலத்திலிருந்து நுங்கம்பாக்கம் சிற்றூருக்கு ஒற்றையடிப்பாதை மட்டுமே இருந்தது. 1816இல் இந்த மண்தடம் விரிவாக்கப்பட்டு நுங்கம்பாக்கம் சாலையாக இடப்பட்டது.

பண்புக்கூறுகள்

நெருக்கடிமிக்க இச்சாலையில் பல அலுவலகங்களும் நிறுவனங்களும் உயர்தர வணிக வளாகங்களும் அமைந்துள்ளன. இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் தென்னிந்திய மண்டல மன்றம், ஆயக்கார் பவன், மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க அலுவலகங்கள், ஐசிஐசிஐ வங்கி, ஏபிஎன் அம்ரோ வங்கி, யெசு வங்கி, சீமென்சு அலுவலகம், தி பார்க் தங்குவிடுதி, டாஜ் கோரமண்டல் ஐந்து நட்சத்திர தங்குவிடுதி ஆகியனவும் அமைந்துள்ளன. இசுபணி மையம் எனப்படும் அங்காடி வளாகமும் இச்சாலையில் உள்ளது.

இச்சாலையின் ஒருபுறத்தில் வில்லேஜ் சாலையும் மறுமுனையில் அண்ணா சாலையின் அண்ணா மேம்பாலமும் உள்ளது. அண்ணாசாலையைக் கடந்த இச்சாலையின் நீட்சி மெரீனா கடற்கரை நோக்கிச் செல்கின்றது; ஆனால் செமினி வட்டத்தை கடந்து இது கதீட்ரல் சாலை எனப்படுகின்றது. உத்தமர் காந்தி சாலை, அண்ணாசாலை, கதீட்ரல் சாலை சந்திப்பு ஜெமினி சர்க்கிள் எனப்படுகின்றது. இந்த வட்டத்தின் வடகிழக்கில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.