சுவீடிய குரோனா
சுவீடிய குரோனா (நாணயக் குறியீடு SEK) என்பது, 1873 ஆம் ஆண்டிலிருந்து, சுவீடன் நாட்டின் நாணயமாக இருந்து வருகிறது. உள்ளூரில் இது kr எனச் சுருக்கமாகக் குறிக்கப்படுகின்றது. குரோனா என்பதன் பன்மை குரோனர் ஆகும். ஒரு குரோனா 100 ஓரே (öre) க்குச் சமமானது. சுவீடிய குரோனா, பின்லாந்தின் அலண்ட் தீவுகளின் சில பகுதிகளில் அதிகார முறையிலல்லாமல் புழக்கத்தில் உள்ளது.
சுவீடிய குரோனா | |
---|---|
ஸ்வென்ஸ்க் க்ரோனா (சுவீடியம்) | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | SEK |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | ஓர் |
பன்மை | குரோனர் |
ஓர் | ஓர் |
குறியீடு | kr |
வேறுபெயர் | spänn |
வங்கிப் பணமுறிகள் | 20, 50, 100, 500, 1000 குரோனர் |
Coins | 50 ஓர், 1, 5, 10 குரோனர் |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | சுவேரிஜஸ் ரிக்ஸ்பாங்க் |
Website | www.riksbanken.se |
Printer | தும்பா புருக் |
Website | www.tumbabruk.se |
Valuation | |
Inflation | 4.0% |
Source | Sveriges Riksbank, மே 2008 |
Method | நுகர்வோர் விலைச் சுட்டெண் |

வரலாறு
1873 ஆம் ஆண்டில் ஸ்கண்டினேவியப் பணமுறை ஒன்றியம் உருவாக்கப்பட்டபோது அன்று சுவீடனில் புழக்கத்தில் இருந்த சுவீடிய ரிக்ஸ்டேலர், ரிக்ஸ்மிண்ட் என்பவற்றுக்குப் பதிலாக குரோனா அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வொன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளான டென்மார்க், நோர்வே ஆகியவற்றிலும் இதே நாணயம் குரோனே (krone) என்னும் பெயரில் புழக்கத்துக்கு வந்தது. தங்கத்தைத் தர அளவீடாகக் கொண்ட இம்மூன்று நாணயங்களும், தூய தங்கத்தின் 1⁄2480 என வரையறுக்கப்பட்டது.
முதலாம் உலகப் போருக்குப் பின் பணமுறை ஒன்றியம் கலைக்கப்பட்ட போதிலும், மூன்று நாடுகளும் அதே பெயர்களையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தன. ஆனால் நாணயங்கள் வேறு வேறானவையாகும்.
நாணயக் குற்றிகள்
1873 க்கும், 1876 க்கும் இடையில் 1, 2, 5, 10, 50 ஆகிய ஓர்கள் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகளும், 1, 2, 10, 20 குரோனர் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. இவற்றில், 1, 2, 5 ஓர்களுக்கான நாணயக் குற்றிகள் வெண்கலத்தாலும், 10, 25, 50 ஓர்களும், 1, 2 குரோனர் நாணயங்கள் வெள்ளியாலும், 10, 20 குரோனர் நாணயங்கள் தங்கத்தாலும் செய்யப்பட்டிருந்தன. தங்கத்தாலான 5 குரோனர் நாணயம் 1881 ஆம் ஆண்டில் புதிதாகச் சேர்க்கப்பட்டது.
தங்க நாணயங்களின் உற்பத்தி 1902 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் 1920 க்கும், 1925 க்கும் இடையில் சிறிது காலம் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அதன் பின்னர் முற்றாகவே நிறுத்தப்பட்டது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஏற்பட்ட உலோகத் தட்டுப்பாட்டினால், 1917, 1919 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெண்கலத்துக்குப் பதிலாக இரும்பும், 1920 இல் வெள்ளிக்குப் பதிலாக நிக்கல்-வெண்கலமும் நாணயங்களுக்குப் பயன்பட்டன. 1927 இல் வெள்ளி நாணயங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தன.