எட்டயபுரம்
எட்டயபுரம் (ஆங்கிலம்:Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.[4]
எட்டயபுரம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 9°09′00″N 77°58′59″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வட்டம் | எட்டயபுரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3] |
பேரூராட்சி மன்றத் தலைவர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,772 (2011) • 730/km2 (1,891/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
17.5 சதுர கிலோமீட்டர்கள் (6.8 sq mi) • 60 மீட்டர்கள் (200 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/ettayapuram |
அமைவிடம்
தூத்துக்குடிக்கும் - கோவில்பட்டிக்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சி அமைப்பு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,646 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,772 ஆகும்[5][6]
17.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]
வரலாறு
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.[8] தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.
மக்கள் தொழில்
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.
நெசவுத் தொழில்

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பெட்டித் தொழில்
நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை

தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம்.
பாரதியின் பிறப்பிடம்

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.
எட்டப்பன்

எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,[9] பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.
சுற்றுலா
வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.
இவ்வூரில் காணத்தக்க இடங்கள்
- பாரதி நினைவு மணி மண்டபம்[4]
- பாரதி பிறந்த வீடு
- முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்
- உமறுப் புலவர் தர்கா
- எட்டப்பன் அரண்மனை
- மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை
அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்
- வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி.
- எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான்.
- கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு.
- அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான்
எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்
- எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர்.
- கே.கே.ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார்
- "எட்டயபுரம் வரலாறு" என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே.சதாசிவன், மா.இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர், 400 ஆண்டுக் காலப் பழமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர்.
- எட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் 'குமாரகீதம்' என்ற நூலை இயற்றியுள்ளார். 'இந்தியா' பத்திரிகையின் மூலப் பிரதிகளை ஆய்வு செய்து, 'பாரதி தரிசனம்' என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் 'மண்வெறி' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன். அதே விகடனில் 'ஆசைப்பந்தல்' என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் 'கலைஞர் பாமலர் நூறு' என்ற ஒரு வரலாற்று நூலை மரபுக் கவிதைகளாக எழுதி, மேழிச் செல்வி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
- எட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை, 'திருநெல்வேலி சீமைச் சரித்திரம்' என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம், கவிஞர்.
- எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
- இராஜாமணி, 'வீரன் அழகுமுத்து யாதவ்' என்ற நூலை எழுதிப் பெருமை சேர்த்துள்ளர். இளசை அருணா என்பவர் எழுதிய 'கரிசல் மண்' என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார்.
- எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.
- இன்னும் இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல,பொறியாளர் மு.மலர்மன்னன், மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் [10]
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள்
- பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- Ettayapuram Town Panchayat
- விளாத்திக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
- எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது.
- எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12