ரௌலட் சட்டம்

ரெளலட் சட்டம் அல்லது ரவ்லட் சட்டம் (Rowlatt Act) என்பது பிரித்தானிய இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும். மார்ச் 1919ல் இச்சட்டம் இயற்றப்பட்டது. விடுதலை / சுயாட்சி வேண்டும் இந்தியர்களை அடக்கவும், காலனிய அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

முதலாம் உலகப் போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவில் (குறிப்பாக, பஞ்சாப்பிலும் வங்காளத்திலும்) புரட்சி இயக்கங்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றி வேகமாக வளர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காலனிய அரசு சர் சிட்னி ரெளலட் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து புரட்சி இயக்கங்களை ஒடுக்க வழிவகைகளை ஆராய்ந்தது. ரெளலட் குழுவின் பரிந்துரையின் பேரில் ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட எந்த பிரித்தானிய இந்தியக் குடிமகனையும் ஈராண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணையின்றி சிறை வைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், நீதிமன்ற அனுமதியின்றிச் சிறையிலிடவும் இச்சட்டம் வழிவகுத்தது.

இச்சட்டம் கடுமையானது என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் எதிர்த்தனர். இதற்கு எதிரான போராட்டங்கள் ரெளலட் சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்டன. நாடெங்கும் இச்சட்டத்தைக் கண்டித்து ஊர்வலங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. அம்ரித்சர் (அமிர்தசரஸ்) நகரில் இச்சட்டத்துக்கு எதிராக நடந்த கூட்டமொன்றில் பிரித்தானியப் படைவீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சட்டம் கொடுமையானது என்பதை ஏற்ற காலனிய அரசு மார்ச் 1922ல் இதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

சட்டத்தின் கடுமை

இந்தச் சட்டத்தின்கீழ் எந்த இந்திய பிரஜையையும் பிணைஆணை இல்லாமல் கைது செய்யலாம், விசாரணை இன்றி சிறைப்படுத்தலாம், கூட்டங்களில் பங்கெடுக்கத் தடைவிதிக்கலாம், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வசிக்க நிர்பந்திக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவரை மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்துத் தண்டனை வழங்குவார்கள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு மேல்முறையிடு செய்யும் அனுமதி கிடையாது.

நாடுதழுவிய எதிர்ப்பு

இந்தச் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து மகாத்மா காந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்தார், ஜின்னா தனது "பேரரசின் சட்டமன்ற சபை உறுப்பினர்" பதவியில் இருந்து விலகினார், தாகூர் 1915 ஆம் வருடம் ஆங்கில அரசு வழங்கியிருந்த knighthood விருதைத் துறந்தார். நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் தொடர்ந்தன.

ஜாலியன்வாலாபாக் படுகொலை

1919 ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன்வாலாபாக் எனுமிடத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விதமாகக் கூடியிருந்த பொதுமக்களை ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டார், இதில் தோராயமாக 380 பேர் மரணமடைந்தனர், சுமார் 1200 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதிலும் இருந்து வந்த கண்டனங்களைத் தொடர்ந்து ஆங்கில அரசு "ஹண்டர் கமிஷன்" என்ற குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் டயரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில் இதற்கு முரணாக டயர்க்கு "பஞ்சாப்பின் பாதுகாவலன்" என்று பொறிக்கப்பட்ட வாளும், ஆங்கில ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியும் வழங்கப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.