மகாசமுந்து மாவட்டம்

மகாசமுந்து மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மகாசமுந்து என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இந்த மாவட்டத்தின் தலைமையகம் மகாசமுந்த் நகரமாகும். இந்த மாவட்டத்தின் எல்லைகள் ராய்ப்பூர் மாவட்டம் - கரியாபந்து மாவட்டம் - பலோடா பசார் மாவட்டம் - சதீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவட்டம், பர்கர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் நூவாபடா மாவட்டம் என்பன ஆகும்.

புவியியல்

மகாசமுந்த் மாவட்டம் சத்தீஸ்கரின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 3902.39 கிமீ² பரப்பளவைக் கொண்டது. இந்த மாவட்டம் 20 ° 47 'முதல் 21 ° 31'30 "அட்சரேகை மற்றும் 82 ° 00' மற்றும் 83 ° 15'45" தீர்க்கரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. மேலும் ராய்கர் மாவட்டம் மற்றும் சத்தீஸ்கரின் ராய்பூர் மாவட்டம், நூவாபடா மாவட்டம் மற்றும் ஒடிசாவின் பர்கர் மாவட்டம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இங்கு பாக்பஹ்ரா, பாஸ்னா மற்றும் பித்தோரா ஆகிய பகுதிகளில் கிரானைட் பாறைகளைக் காணலாம். சத்தீஸ்கரில் பெரும்பாலும் பாறைகள் சுண்ணாம்புக் கரடு ஆகும். இந்த மாவட்டத்தில் ஊடுருவும் வடிவங்களில் நியோ-கிரானைட், டாலிரைட், படிகக்கற்கள் ஆகியவை காணப்படுகின்றன. எனவே தீவிர சுரங்க நடவடிக்கைகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளன.

போக்குவரத்து

மகாசமுந்து மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 6, தேசிய நெடுஞ்சாலை 217 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 216 ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. அரங் - மகாசமுந்து முதல் சரைபாலி வரையிலும் சரைபாலி முதல் ஒடிசா வரை தேசிய நெடுஞ்சாலை 6 இன் நான்கு வழிச் சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கிழக்கு கடற்கரை புகையிரத வலயத்தின் முக்கியமான புகையிரத நிலையம் மகாசமுந்து புகையிரத நிலையம் ஆகும். மகாசமுந்து புகையிரத நிலையம் இந்திய ரயில்வே அமைப்பின் மூலம் ராய்ப்பூர், துர்க், நாக்பூர், மும்பை, டெல்லி, போபால், குவாலியர், சம்பல்பூர், திதிலாகர், விசாகப்பட்டினம், திருப்பதி, புரி, பிலாஸ்பூர், கோர்பா, ஜோத்பூர், அஜ்மீர், அகமதாபாத் ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரம்

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி மகாசமுந்து மாவட்டத்தில் 1,032,754 மக்கள் வசிக்கின்றனர்.[2] இந்த மக்கட்தொகை சைப்பிரசு தேசத்தின் சனத்தொகைக்கும், அமெரிக்க மாநிலமான ரோட் தீவின் மக்கட்தொகைக்கும் சமமானது ஆகும்.[3][4] சனத்தொகை அடிப்படையில் இந்தியாவில் 640 மாவட்டங்களில் 438 ஆவது இடத்தைப் பெறுகின்றது. இந்த மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு (560 / சதுர மைல்) 216 மக்கள் மக்கள் அடர்த்தி உள்ளது.[2]

2001-2011 வரையான காலப்பகுதியின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 20%  வீதம் ஆகும். மக்களின் கல்வியிறிவு விகிதம் 71.54% வீதம் ஆகும். மகாசமுந்து மாவட்டத்தில் பழங்குடியினர் 28.9%  வீதம் வாழ்கின்றனர். பூஜியா, பின்ஜ்வார், தன்வார், ஹல்பா, கமர், கன்வார், காரை, முண்டா, பர்தி, பஹாலியா, சவ்ர், சஹாரியா, சோனார், சன்வாரா மற்றும் கார்வார் ஆகிய பழங்குடியினர் வசிக்கின்றனர்.[5]

2011 ஆம் ஆண்டின் இந்திய சனத்தொகை கணக்கெடுப்பில் மகாசமுந்து மாவட்டத்தில் 80.72% வீதமான மக்கள் இந்தி மொழியையும், 18.34% வீதமான மக்கள் ஒடியா மொழியையும் தங்கள் முதன்மை மொழியாக கொண்டிருந்தனர். மேலும் இந்த பிராந்தியத்தில் சத்தீஸ்கரி, இந்தி மற்றும் ஒடியா என்பன பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.[6]

நிர்வாகம்

மகாசமுந்து மாவட்டம் மகாசமுந்து நகரம், சராய்பாலி, பாக்பஹ்ரா, பித்தோரா, பசானா ஆகிய  ஐந்து தெஹ்சில்களை கொண்டுள்ளது. மேலும் இங்கு பன்னிரண்டு காவல் நிலையங்களுக்கும், ஐந்து புறக்காவல் நிலையங்களும் உள்ளன.

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.