பவணந்தி

பவணந்தி அல்லது பவணந்தி முனிவர் என்பவர், இடைக் காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பது சில வரலாற்றாய்வாளர் கருத்தாகும். இவரது பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துக்களையும் சான்றாகக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.

திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவ ணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே

என்பது நன்னூலுக்கு இவர் எழுதிய சிறப்புப் பாயிரத்தின் இறுதி வரிகள். இதில் இவர் பற்றிய சில தகவல்கள் உள்ளன. இதிலிருந்து, நன்னூல் எழுதுவதற்கு இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் ஒருவனாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் சிலரது கருத்து. பொன்மதிற் சனகை என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ள சன்மதி முனி என்பவரே இவரது குரு என்றும் கருதப்படுகிறது. இவர் எழுத்துபடிவத்தைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.