நன்னூல்

நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.[1]

நன்னூல் வகைப்பாடு 1
நன்னூல் வகைப்பாடு 2
நன்னூல் வகைப்பாடு 3

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.

நூலின் பகுதிகள்

நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இந் நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர். இவை:

  1. பாயிரம்
  2. எழுத்ததிகாரம்
  3. சொல்லதிகாரம்

பாயிரம்

சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்யவேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.[2][3][4][5]

எழுத்து
எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துக்கள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துக்கள் மொழிமுதலாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை [6] மாற்றி வரும் [7] எனக் காட்டுகிறார்.
சொல்
தொல்காப்பியம் ஒன்பது இயல்களில் கூறிய செய்திகள் நன்னூலில் நான்கு இயல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
  • தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை.[8]

பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்

  1. நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  2. ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  3. பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  4. மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  5. பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)

எழுத்ததிகாரம்

இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:

  1. எழுத்தியல்
  2. பதவியல்
  3. உயிரீற்றுப் புணரியல்
  4. மெய்யீற்றுப் புணரியல்
  5. உருபு புணரியல்

சொல்லதிகாரம்

இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:

  1. பெயரியல்
  2. வினையியல்
  3. பொதுவியல்
  4. இடையியல்
  5. உரியியல்

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
  2. நூல் 3-639 முதல் 643
  3. நூலின் உரை 3-644 முதல் 655
  4. உத்தி 656
  5. இவை பிற்காலச் சேர்க்கை என்னும் கருத்து உண்டு.
  6. சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
    அ, ஐ, ஒள, எனும் மூன்று அலங்கடையே (தொல்காப்பியம் 1-62)
  7. பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய
    ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல் (நன்னூல் 102)
  8. இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள் முதலான பொருள்-துறை நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.