மாணாக்கர் (இலக்கணம்)

அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.

நன்னூல்

மாணாக்கர் வரலாறு

  • தன்மகன், ஆசிரியர் மகன், அரசன் மகன், மிகுந்த பொருள் தருபவன், வழிபடுவோன் ஆகியோரை அக்கால ஆசிரியர்கள் மாணவர்களாக ஏற்றுக்கொண்டனர். [1]

மாணாக்கர் வகை [2]

  • தலை மாணாக்கர்
    • பால் கலந்த நீரில் பாலை மட்டும் உண்ணும் அன்னம் போன்றவர். [3]
    • ஈரம் கலந்த மண்ணில் சத்தை மட்டும் கொள்ளும் மரவேர் போன்றவர்
    • கிடைக்கும் புல்லை விரைந்து உண்டு அசை போடும் பசு போன்றவர்
  • இடை மாணாக்கர்
    • உழும் அளவுக்குப் பலன் தரும் மண் போன்றவர்.
    • சொன்னதை மட்டும் சொல்லும் கிளிப்பிள்ளை போன்றவர்
  • கடை மாணாக்கர்
    • ஓட்டைக் குடம் போல ஆசிரியர் சொன்னதையெல்லாம் மறப்பவர்.
    • செடிக்கொரு வாயாகக் கடித்து மேயும் ஆடு போன்றவர்
    • தெளிந்த நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமை போன்றவர்
    • பன்னாடை போல் சாற்றை வடிய விட்டுவிட்டுச் சக்கையைப் பற்றிக்கொள்பவர்

மாணாக்கர் ஆகாதவர் [4]

குடிகாரன், சோம்பேறி, ஆங்காரம் கொண்ட மானி, காமுகன், கள்வன், பிணியாளன், மனவளம் இல்லா ஏழை, எதற்கெடுத்தாலும் பிணக்குப் போட்டுக்கொள்ளும் பிணக்கன், தூங்கமூஞ்சி, மந்தபுத்திகாரன், தொன்னூலைக் கண்டு அஞ்சித் தடுமாறுபவன், தற்பெருமை கொள்ளும் தறுக்கணன், பாவம் செய்வோன், திரும்பத் திரும்பத் தவறு செய்யும் படிறன் – முதலானோர் மாணாக்கராக ஏற்கத் தகாதவர்கள்.

சீவசம்போதனை

உயிர் வாழ்வதற்கு உரிய அறிவுரை கூறும் இந்த நூல் மாணாக்கராய் இருந்து நூல் கேட்பதற்கு உரியவர் இன்னின்னார் என்று குறிப்பிடுகிறது. [5]

  • அட்டைபோல் ஆசிரியரைத் துன்புறுத்திப் பெறுபவர்
  • கழுகு போல் ஆசிரியர் சுவடிகளைக் கவர்ந்து செல்வோர்

ஆகிய உவமைகள் இதில் புதுமையானவை.

அடிக்குறிப்பு

  1. நன்னூல் 37
  2. நன்னூல் 38
  3. நீரிலுள்ள காற்றை மட்டும் மூச்சாக்கிக்கொள்ளும் மீன் போல அக்கால அன்னம் பாலை மட்டும் பிரித்துண்ணும் உறுப்பினைப் பெற்றிருந்தது போலும்
  4. நன்னூல் 39
  5. அட்டைக் கிளி வெருகு ஆடு எருமை வல்லூறு
    குட்டற்குடம் கல்லொடு மண் - மட்டக்கள்
    நெய்வடிநார் போல்வாரை நீத்து அன்னமே போலும்
    மெய் உணர்வார் கேட்டல் விதி.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.