தொல்காப்பியம் கண்ட தமிழியல்

தொல்காப்பியம் தெளிவாகத் தெரியும் இடைச்செருகல் பகுதிகளை விட்டுவிட்டுப் பார்க்கையில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கண்டறிந்துள்ளனர். தொல்காப்பியம் தமிழ்மொழியை அறிவியல் கோணத்தில் அலசிப் பார்க்கும் ஓர் இலக்கண நூல். இலக்கணத்தை இக்காலத்தில் மொழியியல் எனக் கூறுகின்றனர்.

தொல்காப்பியம் தமிழ்மொழியை எழுத்து [1], எழுத்து தனித்தும் சேர்த்தும் சொல்லப்படும்போது ஒன்றைச் சுட்டும் சொல் [2], சொற்கள் தொடர்ந்து நின்று வாழ்வியலை உணர்த்தும் பொருள் [3] என மூன்று நிலைகளில் வகைப்படுத்திக்கொண்டுள்ளது.

எழுத்து

தனிநிலை எழுத்து [4], புணர்நிலை எழுத்து [5], எழுத்தொலி பிறக்கும் முறை [6], எழுத்துக்கள் இணையும் நிலை [7], இணையும் புணர்ச்சியில் சில தொகுதி எழுத்துகள் புணரும் பாங்குகள் [8], அவை சாரியை முதலான உருபுகள் சேர்ந்து புணரும் நிலை [9], உயிரெழுத்தில் முடியும் சொற்கள் புணரும் பாங்கு [10], மெய்யெழுத்தில் முடியும் சொற்கள் புணரும் பாங்கு [11], குற்றியலுகர ஒலியில் முடியும் சொற்கள் புணரும் பாங்கு [12] - என எழுத்துக்களால் மொழி எய்தும் முறைமைகள் எழுத்துப் பகுதியில் கூறப்படுகின்றன.

சொல்

கருத்துணர்த்தும் சொற்கள் புணர்ந்து மயங்கும் முறைமை [13], பெயரானது வினையோடு மயங்கும்போது செய்வது போலவும், செய்யப்படுவது போலவும் உருபால் வேறுபடும் நிலை [14], ஒரு வேற்றுமை உருபானது தன் வேற்றுமைப் பொருளை உணர்த்தாமல் வேறொரு வேற்றுமைப் பொருளை உணர்த்தும் நிலை [15], பெயர் விளிக்கப்படும் முறைமை [16], பெயர்கள் தோன்றும் பாங்கு [17], வினைகள் தோன்றும் பாங்கு [18], மொழியும் தொடரில் பெயரோடும் வினையோடும் சேர்ந்து, பெயராகவோ வினையாகவோ கொள்ளமுடியாதபடி இடைப்பட்டு இணையும் சொற்கள் [19], ஒரு சொல் பல பொருளுக்கும், பல சொல் ஒரு பொருளுக்கும் உரியனவாகும் உரிமை [20], இந்த எட்டுப் பிரிவுகளில் சொல்லப்படாமல் எஞ்சி நிற்கும் சொல்லைப்பற்றிய துணுக்குச் செய்திகள் [21] - என்பன சொல்லைப் பற்றிய நெறிமுறைகள்.

பொருள்

எழுத்தும் சொல்லுமாகிய மொழியின் வெளிப்பாடு வாழ்க்கையின் இலக்காகிய இலக்கியங்களாக வெளிப்பட்டு வாழ்க்கைப்பொருளை வளப்படுத்தும். உடலுறவு கொள்ளும் அக-வாழ்க்கை [22], ஊருறவு கொள்ளும் புறவாழ்க்கை [23], காதலர் உறவு [24], கணவன்-மனைவியர் உறவு [25], இலக்கியங்கள் குறிப்பால் பொருள் உணர்த்தும் பாங்கு [26], உடல் உணர்வுகள் பொருள் உணர்த்தும் பாங்கு [27], உவமைகளால் பொருள் உணர்த்தும் இலக்கியப் பாங்கு [28], இலக்கியங்களாக அமைந்துகிடக்கும் செய்யுளின் பாங்கு [29], தமிழ்மொழியில் வழிவழியாகப் பயன்படுத்தி மரத்துப்போன சொற்கள் [30] - ஆகியவை தமிழின் கருத்தறிய உதவும் மொழிப்பொருள்கள்.

மேலைய மொழியியலார் நெறியில் தொல்காப்பிய மொழியியல்

தமிழியல்

மேலே காட்டப்பட்ட தொல்காப்பியர் கண்ட மொழியியலை மேலையர் மொழியியல் நோக்கில் ஒப்பிட்டுக் காணின் படத்தில் காண்பது போல் அமையும். தொல்காப்பியத்தில் உள்ள நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல் செய்திகள் மரபு என்பதனுள் அடங்கும். நூன்மரபு இயலில் கூறப்பட்ட எழுத்தொலி இணைவைத் தொல்காப்பியம் எழுத்து மயக்கம் என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் சொல்லை அதன் இயல்பு நோக்கிப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று பாகுபடுத்துகிறது. சொல் வழங்கும் இடத்தை நோக்கி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், உரிச்சொல் என்றும் பாகுபடுத்துகிறது. பொருளியலில் மொழியில் கருத்தைப் பயன்படுத்த நூல்கள் கையாண்டுள்ள முறைமைகள் கூறப்படுகின்றன.

அடிக்குறிப்பு

  1. எழுத்ததிகாரம்
  2. சொல்லதிகாரம்
  3. பொருளதிகாரம்
  4. நூன்மரபு
  5. மொழிமரபு
  6. பிறப்பியல்
  7. புணரியல்
  8. தொகைநிலை
  9. உருபியல்
  10. உயிர் மயங்கியல்
  11. புள்ளி மயங்கியல்
  12. குற்றியலுகரப் புணரியல்
  13. கிளவியாக்கம்
  14. வேற்றுமையியல்
  15. வேற்றுமை மயங்கியல்
  16. விளிமரபு
  17. பெயரியல்
  18. வினையியல்
  19. இடையியல்
  20. உரியியல்
  21. எச்சவியல்
  22. அகத்திணையியல்
  23. புறத்திணையியல்
  24. களவியல்
  25. கற்பியல்
  26. பொருளியல்
  27. மெய்ப்பாட்டியல்
  28. உவமவியல்
  29. செய்யுளியல்
  30. மரபியல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.