சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்

சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பிரிவுகள் (Divisions of Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணம், தற்கால தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்த அனைத்துப் பகுதிகளும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பரப்புகளுக்கிடையே அமைந்த மைசூர் அரசு, திருவிதாங்கூர், பங்கனப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானம்

மேலும் பிரித்தானியா ஆட்சிக்கு அடங்கிய புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானங்கள், 1950ல் இந்தியாவிடன் இணைக்கும் வரை, சென்னை மாகாணத்தின் மேலாட்சியின் கீழ் இருந்தது.

1953ல் சென்னை மாகாணத்தில், தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு ஆந்திரப் பிரதேசம் புதிதாக நிறுவப்பட்டது.

1959ல், சென்னை மாகாணத்தின் கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகளை, மைசூர் இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் நிர்வாக மண்டலங்கள்

சென்னை மாகாணத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்து:[1]

மேற்கு கடற்கரை

அரபுக் கடல் ஒட்டிய தற்கால கர்நாடகா மற்றும் கேரளாவின் மாவட்டங்களைக் கொண்டு மேற்கு கடற்கரை மண்டலம், சென்னை மாகாணத்தின் கீழ் செயல்பட்டது.[1]

தக்காணம்

18ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள், தற்கால பெல்லாரி மாவட்டம், கடப்பா மாவட்டம், அனந்தபூர் மாவட்டம், கர்நூல் மாவட்டங்களைக் கைப்பற்றி, சென்னை மாகாணத்தின் தக்காண மண்டலத்தை நிறுவினர். [2]

வட சர்க்கார்

ஒடிசா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கஞ்சம் மாவட்டம் மற்றும் தற்கால ஆந்திர பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களைக் கொண்டு வடசர்க்கார் மண்டலம் நிறுவப்பட்டது. [2]

கோரமண்டலம்

தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் கொண்டு கோரமண்டலம் நிறுவப்பட்டது.[2]

சென்னை மாகாணத்தின் மாவட்டங்கள்

சென்னை மாவட்டம்

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், தற்கால சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் சென்னை மாவட்டம் நிறுவப்பட்டது.

காளகத்தி நாயக்கர்கள் தற்கால சென்னை நகரத்தை, கிபி 1640ல் ஆங்கிலேயர்களுக்கு வணிக மையத்தை நிறுவ, கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தின், பிரான்சிஸ் டே எனபவருக்கு வழங்கினர்.[3][4]

1763ல் ஆற்காடு நவாப், தன் கடனை அடைக்க வேண்டி, செங்கல்பட்டு பகுதிகளை சென்னை மாகாண ஆட்சியாளர்களுக்கு விற்றார். [5]

வட ஆற்காடு

தற்கால ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைக் கொண்டு வட ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. சித்தூர் நகரம் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது.[4]

தென் ஆற்காடு மாவட்டம்

தற்கால கடலூர் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைக் கொண்டு தென் ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. முன்னர் இப்பகுதிகளுடன் செங்கல்பட்டு மற்றும் நெல்லூர் முதலிய ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது.[6]

சேலம்

தற்கால சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்கள் சேர்ந்து சேலம் மாவட்டமாக. சென்னை மாகாணத்தில் இருந்தது.[7]

கோயம்புத்தூர்

தற்கால கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம் மற்றும் தற்கால கர்நாடகா மாநிலத்தின் கொல்லேகல் வருவாய் வட்டத்தைக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம் செயல்பட்டது.[8]

1792 மற்றும் 1799ல் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில், ஆங்கிலேயப் படைகள், திப்புசுல்தானை வீழ்த்தி சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். [9][10]

மதுரை

தற்கால மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டங்கள் மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்தன. [11]

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர்.

புதுக்கோட்டை

மதுரை நாயக்கர்களின் வீழ்ச்சியின் போது புதுக்கோட்டைப் பகுதியில் புதுக்கோட்டை சமஸ்தானம் துவங்கியது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் இவ்வரசு சுதேச சமஸ்தானமாக விளங்கியது. [12] இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

திருநெல்வேலி

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர்.

திருச்சிராப்பள்ளி

தற்கால திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் மாவட்டம், கரூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டமாக இருந்தது.

தஞ்சாவூர்

தற்கால தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் தஞ்சாவூர் மாவட்டமாக விளங்கியது. தஞ்சாவூர் மராத்திய அரசின் இறுதி மன்னர் 1855 ஆண் வாரிசு இன்றி இறந்த போது, அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆங்கிலேயர்கள் தஞ்சாவூரை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். .

மலபார்

தற்கால வட கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகள் மலபார் மாவட்டம் எனும் பெயரில் செயல்பட்டது.

தெற்கு கர்நாடகா

சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னடப் பகுதியில், தற்கால கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம் மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டங்கள் இருந்தன. தெற்கு கன்னடப் பகுதியில் துளு, கொங்கணி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்பட்டது.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

  • Edgar Thurston (1913). Provincial Geographies of India:The Madras Presidency with Mysore, Coorg and Associated States. Cambridge University.
  • Gantz Brothers (1862). A short account of the Madras Presidency. Oxford University.

ஆதார நூற்பட்டியல்

  • The Maratha Rajas of Tanjore by K.R.Subramanian, 1928.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.