விறன்மிண்ட நாயனார்

“விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை

விறன்மிண்ட நாயனார்
பெயர்:விறன்மிண்ட நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:சித்திரை திருவாதிரை
அவதாரத் தலம்:செங்கண்ணூர்
முக்தித் தலம்:ஆரூர்/வண்டாம்பாளை [1]

சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனைய பற்றெல்லாவற்றையும் முற்றாகத் துறந்தவர். சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர்.

திருத்தலம் தோறும் சென்று வழிபாடாற்றும் வழக்கமுடைய இப்பக்தர் முதலில் திருக்கூட்டத்தை வணங்கிப் பின்னரே கோயிலுட் சென்று வழிபடும் நியமத்தினர். இக்கொள்கையை விடாதுபின்பற்றும் விறன்மிண்டர் சேரநாட்டுத் தலங்களை வழிபட்டு சோழநாட்டுத் திருத்தலங்களையும் வணங்கும் காதலால் திவாரூர்த்தலத்தை அடைந்து அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்டு ஒருவாறு ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்றதும், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறகு; இவனையாண்ட சிவனும் புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.

இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

ஆதாரங்கள்

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.