மெய்ப்பொருள் நாயனார்

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

மெய்ப்பொருள் நாயனார்
பெயர்:மெய்ப்பொருள் நாயனார்
குலம்:மலையான்மான்
பூசை நாள்:கார்த்திகை உத்திரம்
அவதாரத் தலம்:திருக்கோவலூர்
முக்தித் தலம்:திருக்கோவலூர் [1]
Meiporul Nayanar
பிறப்புunknown
Tirukkoyilur
தலைப்புகள்/விருதுகள்Nayanar saint
தத்துவம்Shaivism, Bhakti
The images of the Nayanars are found in many Shiva temples in Tamil Nadu.

இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” – திருத்தொண்டத் தொகை.

ஆதாரங்கள்

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.