இடங்கழி நாயனார்

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

இடங்கழி நாயனார்
பெயர்:இடங்கழி நாயனார்
குலம்:வேளிர்[1]
பூசை நாள்:ஐப்பசி கார்த்திகை
அவதாரத் தலம்:கொடும்பாளூர்
முக்தித் தலம்:கொடும்பாளூர்

இடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார். [2] சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, 'நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்' எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், 'நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்' என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், 'எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க' என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

  1. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம்- பாடல் 3
  2. பெரியபுராணம் பாடல் 4109-4112
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.