பரமனையே பாடுவார்

"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத்தொகை.

"தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த இயலிசை வல்லவகையில் விண்தோயுநெற்றி
வகுத்தமதிற் தில்லை அம்பலத்தான் மலர்ப்பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்லோ ரென்ப உத்தமரே" - திருத்தொண்டத் திருவந்தாதி

தென் தமிழும் வடமொழியும் ஏனைய திசைமொழியும் ஆகியவற்றில் இறைவனையே பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட இயல் இசைப் பாடல்களை ஒன்றிய மெய்யுணர்வினோடும் இசைகற்கும் வகையால் உள்ளம் உருகிப்பாடும் அடியார்கள் பரமனையே பாடுவார் ஆவார்கள்.

திருத்தொண்டர் புராணசாரம்

அருந்தமிழ் வடகலையால் அருளால் ஒன்றால்
அறிவுநெறி மருவும் அருங்கவிகள் யாவும்
திருந்திய வானவர் பணிய மன்றுள் ஆடும்
தேவர் பிரான் கழலினையே சேரஓதி
விரிந்திடு நாவுடையார் பயன் மேவினார் தாம்
மேலானோம் என மகிழ்ந்து விழிநீர் சோரப்
பரிந்தருளால் பரமனையே பாடவல்ல
பான்மையர் எமை ஆளும் மேன்மையாரே

நுண்பொருள்

பெருமானுக்கு பாடல் உகந்த அருச்சனையாதலால் பாடி மகிழுதல் பெரும் பாக்கியமாம்.

தென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றிய மெய்யுணர்வோடும் உள்ளுருகிப்பாடுவார்
பன்றியுடன் புள்காணாப் பரமனையே பாடுவார் - பெரியபுராணம்

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.