அப்பூதியடிகள் நாயனார்
அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது.[1] [2] அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது. [3]
அப்பூதியடிகள் நாயனார் | |
---|---|
![]() அப்பூதியடிகள் நாயனார் | |
பெயர்: | அப்பூதியடிகள் நாயனார் |
குலம்: | அந்தணர் |
பூசை நாள்: | தை சதயம் |
அவதாரத் தலம்: | திங்களூர் |
முக்தித் தலம்: | திங்களூர் |
திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். திருநாவுக்கரர் அப்பூதியடிகளின் இந்த நற் தொண்டினை அறிந்து அவரில்லத்திற்கு சென்றார். திருநாவுக்கரசருக்கு அப்பூதியடிகள் உணவிட ஆயத்தம் செய்த போது, அப்பூதியடிகள் மகனார் பாம்பு தீண்டி இறந்தார். அதனை அறிந்த திருநாவுக்கரசர் இறைவன் மீது பாடல்கள் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
தொன்மம்

அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்று அவரில்லம் சென்றார் திருநாவுக்கரசர்.
அப்பூதியடிகளை சந்தித்த திருநாவுக்கரசர், ஏன் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் செய்கின்றீர்கள் என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும் எடுத்துரைத்தார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் உணவு உண்ண அழைத்தார்.
வாழை இலையை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகள் மகன் பாம்பு தீண்டி இறந்தார். திருநாவுக்கரசர் வந்திருக்கும் போது மகன் இறந்து போனதால், அதைக் கூறி திருநாவுக்கரசரை உணவு உண்ண தடை செய்து விடக்கூடாதென அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் துயத்தினை மறைத்து உணவு இட்டனர். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்துவர கோரிக்கை வைத்தார். அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார். எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என பாடல்பாடி அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
சிறப்பு
மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.
"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்" - சுந்தரமூர்த்தி நாயனார்
உசாத்துணை
- பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், கொழும்பு, 1990
ஆதாரங்கள்
- “இறைவரோ தொண்டருள் ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
- http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=114&pno=154
- திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்ற அந்தணர்