சோமாசிமாற நாயனார்
“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
சோமாசிமாற நாயனார் | |
---|---|
பெயர்: | சோமாசிமாற நாயனார் |
குலம்: | அந்தணர் |
பூசை நாள்: | வைகாசி ஆயிலியம் |
அவதாரத் தலம்: | அம்பர் |
முக்தித் தலம்: | ஆரூர் |
சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவராயிருந்தார். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார்.
ஈசனுக்கு அன்பர் என்போர் எக்குலத்தவராயினும் அவர்கள் தன்னை ஆளாகவுடையார்கள் என்று உறுதியாகத் தெளிந்திருந்தார்கள்.
சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடைய இந்நாயனார் சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை அடைந்து தம்பிரான் தோழராகிய வன்றொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய நண்பரானார்; திருவாரூரில் ஐம்புலச் சேட்டைகளையும், காமம் முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கிய இவர் அத்திருவாரூரில் தங்கி ஆரூரர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றிய சிறப்பினால் என்றும் நின்று நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்.